Home » » தமிழர்களுக்குத் தீர்வு: இந்தியா அதில் உறுதி! கூட்டமைப்பினருடனான சந்திப்பில் ஜெய்சங்கர் திட்டவட்டம்

தமிழர்களுக்குத் தீர்வு: இந்தியா அதில் உறுதி! கூட்டமைப்பினருடனான சந்திப்பில் ஜெய்சங்கர் திட்டவட்டம்



இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.

குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருமித்த நாட்டுக்குள்தான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றார்கள். எனவே, அவர்களின் அபிலாஷைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் நான் எடுத்துரைத்துள்ளேன்.

மாகாண சபை முறைமையில் மாற்றம் வேண்டாம் எனவும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.

இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதை இலங்கை அரசின் கவனத்துக்கொண்டு வந்துள்ளேன். வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளைச் செய்யும். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலனில் இந்தியா அதிக சிரத்தை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |