Home » » அமைதியின் ஆண்டாக அமையட்டும் புத்தாண்டு!

அமைதியின் ஆண்டாக அமையட்டும் புத்தாண்டு!

 


அமைதியின் ஆண்டாக அமையட்டும் புத்தாண்டு!


புதிய நம்பிக்கையின்
பூக்களாய் மலரட்டும் /
புத்தாண்டின் வருகை
பூரணமாய் நிறையட்டும் /

2020ம் ஆண்டில்
கற்றுத்தந்த பாடங்கள் /
வந்ததும் போனதுமாய்
வலிகளையே முன்னிறுத்தும் /

தூரப்பார்வை இல்லாத
துர்ப்பாக்கிய அரசியலால் /
துயரங்கள் மக்களுக்கே
துணிச்சலாய்ச் சொல்லுகிறேன் /

எரிகின்ற பிரச்சினைகள்
எக்கச்சக்கம் எமக்குள்ளே /
குறுகிய மனப்பாண்மை
குதர்க்கமாய்க் கொண்டுசெல்ல /

காணாமல் ஆக்கப்பட்டோர்
மீண்டு வராததால் /
நான்கு வருடங்களாய்
தாய்க்குலங்கள் வீதியிலே /

கண்ணீரோடு கதறியழும்
தாய்தந்தை மனைவிசகோதரர் /
தமிழரசியல் கைதிகளின்
விடுதலைக்கு விடையில்லை /

நிற்காது தொடர்கிறது
நிற்கதி நிலையோடு /
நிம்மதிப் பெருமூச்சு
வரும்வரையும் போராடி /

அகதிகள் வாழ்வுக்கு
முற்றுப்புள்ளி இன்னுமில்லை /
மறைந்த போராளிகள்
மக்களான்மா உறங்கவில்லை /

போர்முடிந்தால் அமைதிவரும்
பேசியவர்களைக் காணவில்லை /
பெருந்துன்பம் பேரிடர்கள்
எதுவுமிங்கே குறையவில்லை /

2021பங்குனித் திங்களில்
புதியதோர் நம்பிக்கை /
ஜெனிவாவில் தெரிகிறது
விடிவெள்ளி போலவே /

தமிழ்த்தலைமை ஒன்றாகி /
ஒற்றுமையை நீட்டித்தால் /
நிலையான தீர்வொன்றை
எட்டித்தான் பிடித்திடலாம் /

ஈழமக்கள் நலன்கருதி
நான்நீயெனப் போட்டியின்றி /
பொதுவெளியில் ஒன்றாகப்
புரிந்துணர்வு வந்திடுமா /

பொல்லாப்பு இல்லாத
பொற்காலம் வேண்டுமெனில் /
புதிய திட்டங்களை
புகுத்திடல் வேண்டிடுமே /

புலம் பெயர்ந்த
தமிழர் நெஞ்சில் /
புத்துணர்வு பிறந்திட்டால்
புதுயுகமும் உருவாகும் /

புரையோடிக் கிடக்கின்ற
ஈழத்தின் தேசமெங்கும் /
புண்ணிய ஒளிவீசும்
புதுப்பொலிவாய் மாறிவிடும் /

கொழும்புத் தலைமையும்
தமிழ்த்தலைப் பிரதிநிதிகளும் /
மக்களின் நலனுக்காய்
கிராமப்புறம் வரவேண்டும் /

கைத்தொழில் விவசாயம்
மீன்பிடி சிறக்கவேண்டும் /
கல்வியிலே பெரும்பங்கு
கனவுகளைத் தொடவேண்டும் /

கணனி தொழில்நுட்பம்
கரைபுரண்டு ஓடவேண்டும் /
கருணையுள்ள உள்ளங்கள்
கண்திறந்து பார்க்கவேண்டும் /

குண்டுகள் வெடிக்காத
கைதுகள் நடக்காத /
கனிவார்ந்த மனிதர்கள்
கரங்கோர்த்து வரவேண்டும் /

உடலுள்ளம் ஊனமின்றி
ஊர்கூடி நிற்கவேண்டும் /
விடுபட்ட வெற்றிடத்தை
விரைந்து நிரப்பவேண்டும் /

நானென்ற அகங்காரம்
நானிலமும் மறைந்திடவே /
நாமென்று சேர்ந்திடவே
நாளைவரும் புத்தாண்டிலே /

தமிழ்க்கட்சித் தலைவர்கள்
ஐக்கியமாய்க் கைகோர்த்து /
இருண்டுபோன தமிழருக்கு
இருள்விலக உழைக்கவேண்டும் /

ஐக்கிய நாடுகளின்
ஐயம் தீர்ந்துதான் /
அமைதி நிலவிட
அடியெடுத்து வைப்போமே/

பிறக்கின்ற புத்தாண்டு
வலிகளில்லா ஆண்டாக /
வழிகாட்டி நிற்கட்டும்
வாழ்த்துக்கள் அனைவருக்கும் /

ஈழச் செய்திக்காக பிரான்ஸ்சில் இருந்து ரஞ்சன்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |