Home » » வளமை இனிமை எளிமை ஆரோக்கியம் பொங்கும் பொங்கல் திருநாள்

வளமை இனிமை எளிமை ஆரோக்கியம் பொங்கும் பொங்கல் திருநாள்


 வளமை இனிமை எளிமை ஆரோக்கியம் பொங்கும் பொங்கல் திருநாள்

      செ.துஜியந்தன் 

பொங்கல் திருநாள் நம் மக்களின் நன்றி கூறும் பண்பை வெளிப்படுத்துகிறது. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம். என மகா கவி பாரதியார் பாடியதை மெய்ப்பிக்கும் நாள் இது. மனிதர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வைத் தோற்றுவிப்பது உழவுத் தொழில் ஆகும்.

'சூழன்றும் ஏர்ப் பின்னது அதனால்
உழந்தும் உழவே தலை'

என்று திருவள்ளுவர் உழவுத் தொழிலைப் போற்றுகின்றார். இத்தகைய தொழிலைப் புரியும் மக்கள் தம் தொழிலுக்கு மழை, சூரிய ஒளி, மாடுகளின் உழைப்பு ஆகியன அடிப்படைத்தேவை என்று உணர்ந்தனர்.

மழைத் தெய்வமான இந்திரனுக்காகப் போகிப்பண்டிகை, ஒளி தந்து உயிரளிக்கும் சூரியனுக்காக பொங்கல் திருநாள், உழைக்கும் மாடுகளுக்காக மாட்டுப்பொங்கல், பயிர்கள் வளர நீரை அளிக்கும் ஆறுகளுக்காக கன்னிப்பொங்கல் என்று கொண்டாடுகின்றோம்.

போகிப்பண்டிகை

போகி என்பது இந்திரனுக்கு உள்ள ஒரு பெயர். இந்திரன் மழைக்கு கடவுள் என்பதால் இப் பண்டிகை நடைபெறுகிறது. காவிரிப்பூம் பட்டிணத்தில் ஆண்டுதோறும் இந்திர விழா கொண்டாடப்பட்டது என்று சிலப்பதிகாரம் கூறுகி;றது. போகத்துக்கு அதிபதியான இந்திரனை நம் முன்னோர்கள் வழிபட்டுவந்தார்கள். பாய், முறம் போன்ற பழைய பொருட்களை எல்லாம் தீமூட்டி எரித்து விடுவது அன்றைய முக்கிய கடனாகும். போக புத்தியை ( தாழ்ந்த உலகியல் ஆசை) ஞான அக்கினியில் எரிக்கவேண்டும். இந்த உட்கருத்தே போகிப்பண்டிகையில் வெளிப்படுகிறது.

கண்ணபிரான் கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் தனக்கு உரிய வழிபாடு தவறிய பிழைக்காக இந்திரன் கோகுலத்தின் மீது ஏழு நாட்கள் பெருமழை  பெய்யச்செய்தான். கோவர்த்தன கிரியைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து அந்த விடா மழையில் இருந்து கண்ணபிரான் கோகுலம் காத்தார். கர்வம் இடங்கிய இந்திரன் கண்ணன் பாதம் பணிந்தான். இந்திரனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கண்ணன் ஒதுக்கிய நாள் தான் போகி. பண்டைக் காலத்தில் போகி நாள் என்பது இந்திரவிழா என்று பழந்தமிழரால் கொண்டாடப்பட்டது.

தை பிறந்தால் வழி பிறக்கும். திசை மாறும் சூரியனை வரவேற்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் இது கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லலாம். நம் துயரங்கள்போய் தை முதல் நாம் புது வாழ்வு தொடங்குகிறோம். துன்பங்களைப் போக்கிவிடுவதால் அது நாளடைவில் போகி என்றாகி விட்டதோ! போகியன்று பழையன கழிதல் முக்கியமாக இடம்பெறுகிறது. உதவாத பொருட்களைப்போக்குவது போல நம் மனதிலுள்ள தீய இயல்புகளை நீக்கி விட்டு நல்ல இயல்புகளை மட்டும் போற்றிப்பாதுகாக்க வேண்டுமெனவும் போகிப்பண்டிகை உணர்த்துகிறது.

'வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ் தம் என்றுணரப் பற்று'

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப உலகத்தை நிலை நிறுத்தும் வான மழையை அமிழ்தம் என்று உணர்ந்து நம் முன்னோர்கள் போற்றினார்கள். மேலும் இயற்கையையே கடவுளாகக் கண்டு வழிபட்டனர் நம் மக்கள்.

'மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவனளிபோல
மேனின்று தான் சுரத்தலான்'

என இளங்கேவடிகள் சிலப்பதிகாரத்தில் மழையைப் போற்றி வழிபட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொங்கல்

சூரியனை வழிபட்டு நன்றி செலுத்த ஏற்பட்டது பொங்கல் பண்டிகை, உணவுப் பொருட்கள் விளைய சூரிய ஒளி முக்கியகாரணம். ஊயிர்கள் அனைத்தின் வளர்ச்சிக்கம் சூரியன் காரணமாய் உள்ளதை உணர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகப் பொங்கல் விழா அiமைகிறது.

மகரராசிக்கு  சூரியன் வரும் நாள் தை மாதம் முதல் தேதி இது உத்தராயணம், உத்தர அயனம் என்றால் வடக்கு வழி என்று பொருள். சூரியனது தேர் வடக்கு நோக்கி நகர்கிறது. தை முதல் ஆனி வரை உத்தராயணம். சூரியன் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு வந்து சேர்வதை சங்கராந்தி(சங்கிரமணம்) என்பர். தனு ராசியை விட்டு மகரராசிக்கு சூரியன் வந்து சேரும் காலமாக இருப்பதால் இக் காலம் மகர சங்கராந்தி எனப்படும்.
பூகோளவியல் படி உத்தராயண புண்ணிய காலத்தில் சூரியன் மகர ரேகையில் இருப்பதை நாம் அறியலாம். தேவர்களுக்கு உத்தராயணம் பகல் என்றும்,  தஷிணாயனம் இரவு என்றும் கூறுவர். மார்கழி மாதம் முடிந்தவுடன் இத் திருநாள் அமைந்துள்ளதும் ஒரு சிறப்பாகும். 
மார்கழி முழுவதும் தெய்வச்சிந்தனையோடு இருந்து இறைவழிபாடுபுரிந்த பின் உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர்கள் வளம்பெறக் காரணமாக உள்ள சூரியனை வழிபடுவதும் ஒரு சிறப்புத்தானே!

தை பிறப்பதற்குள் அநேகமாக அறுவடையெல்லாம் முடிந்திருக்கும். ஆண்டு முழுவதும் தான் பாடுபட்டதற்கான பலனை உழவன் காண்கிறான். அந்தப் பூரிப்பில் இறைவனுக்கு நன்றி செருத்துகிறான். ஊழவர்கள் தம் உழைப்பில் விளைந்த புது அரிசியைப் பொங்கி சூரியனுக்குப் படைத்து வணங்குகின்றார்கள். பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று மங்கள ஒலி எழுப்புவர். பெண்கள் குரவை போடுவர்.

தமிழர்கள் ஆறு, கோவில், குளம், ஆடல், பாடல், சங்கீதம் போன்றவற்றில் பெரும்பற்றுடையவர்கள் என்பதற்குப் பொங்கல் திருவிழா ஒரு சான்று. அறுவடைக்குப் பின் விழா கொண்டாடுவது உலகின் பல பாகங்களில் நடைபெறுகின்றது. பொங்கலிட்ட அடுப்பிற்கும் நைவேத்தியம் செய்யும் வழக்கம் சில இடங்களில் உள்ளது. புத்தாடையுடன், புதுப்பானை, புது அரிசி, பால், வெல்லம் இட்டுப் பொங்கல் பொங்கி இஞ்சி, கரும்பு, மஞ்சள், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்துப் பூசை செய்வது மரபு. புhல் பொங்குவது போல மங்களம் பொங்கிப் பெருகட்டும் என்பது நம் முன்னோர்களின் கருத்து.

வளமையும், இனிமையும் அரிசியிலும், கரும்பிலும் அமைந்துள்ளன. ஆரோக்கியமும், சௌபாக்கியமும் இஞ்சி, மஞ்சள் கொத்துகளில் உள்ளன. வாழைப்பழம் எளிமையைக் காட்டுகிறது. வளமை, இனிமை, எளிமை, ஆரோக்கியம் மற்றும் சகல மங்களங்களையும் பெற்று வாழ்க்கை பொங்கவேண்டும் என்பதை இந்தப் பண்டிகை குறிக்கிறது.

மாட்டுப்பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். மாட்டின் உழைப்பு, அது இடும் சாணம், அது தரும் பால், கோமாதா என்று போற்றப்படும். பசுவின் லட்சுமி கரம் ஆகியவை நம் வாழ்வை முழுமையாக்குகின்றன. அந்த நன்றியைப்போற்றும் நாள்தான் மாட்டுப் பொங்கல்.
ஆன்று மாட்டையும், பசுவையும் குளிப்பாட்டி அலங்கரித்து அன்று கோ பூஜை செய்வது மிகவும் விசேஷமாகும். 

மாட்டுப்பொங்கல் தினத்திலேயே 'கணு' என்ற பண்டிகையும் கொண்டாடப்படுவதுண்டு. வட இந்தியாவின் ராக்கி நோன்புக்கு இணையான கணுப்பொங்கலில் உடன் பிறந்த சகோதரர்களுக்காக, சகோதரிகள் நோன்ப நேற்பார்கள். மேலும் அன்றைய தினம் கன்னிப் பொண்களும், சுமங்கலிப் பெண்களும், வயதில் மூத்த சுமங்களிகளிடமிருந்து சுப சௌபாக்கிய ஆசி பெற ஒரு சடங்கையும் மேற்கொள்கிறார்கள்.

முதல் நாள் சங்கராந்தியில் வைத்து வழிபட்ட புது மஞ்சளை மூத்த சுமங்கலிகளிடம் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொம்பினால் தம் நெற்றியைக் கீறி ஒரு மஞ்சள் அடையாளம் இடச் சொல்வார்கள். அப்போது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

காணும் பொங்கல்

பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல். மக்கள்  அன்றைய தினம் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று கண்டு, பேசி மகிழ்ந்து திரும்புவார்கள். அத்தோடு ஆற்றங்கரை, மலையடிவாரம் முதலிய இடங்களுக்குச் சென்று மகிழ்வோடு இருப்பர். இது பூ நோன்பு எனப்படும்.
இவ்வாறு தூய்மை, வழிபாடு, உயர்ந்த சிந்தனை போன்றவற்றை நம்மிடையே நிலவச் செய்யும் பண்டிகையாகப் பொங்கல் விளங்கிவருகின்றது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |