Advertisement

Responsive Advertisement

பெரியகல்லாற்றில் உயிரிழந்த 11 வயதுச் சிறுமிக்கு நீதி கோரி பொதுமக்கள் பிரதானவீதியை வழிமறித்த கவனஈர்ப்பு போராட்டம்

 


செ.துஜியந்தன்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடொன்றில் இருந்து 11 வயதுச் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதை தொர்டந்து அக் கிராமமக்கள் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக சந்தேக நபரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி இன்று(13) பிரதானவீதியை வழிமறித்து பொதுமக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கல்முனை-மட்டக்களப்பு பிரதானவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



பெரியகல்லாறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றக்கிழமை எஸ்.அஸ்வினி எனப்படும் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து இருந்தார். இச்சிறுமியின் உடலில் துன்புறுத்தலுக்கான காயங்கள் காணப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். உயிரிழந்த சிறுமியின் தாய் மலேசியாவில் பணிபுரிந்துவரும் நிலையில் சிறுமியின் சிறியதாயிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஓக்டோபர் மாதம் கிராமமக்களில் சிலர் 1929 என்ற சிறுவர் முறைப்பாட்டு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உயிரிழந்த சிறுமின் அழுகுரல் தொடர்ந்தும் அவ் வீட்டில் கேட்பதாகவும்,. அழகிய தோற்றம் கொண்ட சிறுமி அலங்கோலமான தோற்றத்துடன் காட்சியளிப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 09 ஆம் திகதி சிறுமி சுகவீனமடைந்த நிலையில் கிராமசேவகர் மற்றும் ஊர் மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றே சிறியதாய் வைத்தியசாலையில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அதனையடுத்து மறுநாள் 10 ஆம் திகதி சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பெரியகல்லாறு கிராமத்தின் மக்கள் குறித்த சிறுமிக்கு நடந்த அநீதிக்கும், அச்சிறுமியின் உயிரிழப்புக்கும் நீதியைப்பெற்றுத்தருமாறு கோரி கவனஈர்ப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சிறுமியின் பிரதேச பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Post a Comment

0 Comments