Home » » கொரோனாவும் நானும் (சிறுகதை அகரம் செ.துஜியந்தன்)

கொரோனாவும் நானும் (சிறுகதை அகரம் செ.துஜியந்தன்)

 


கொரோனாவும்  நானும்  (சிறுகதை அகரம் செ.துஜியந்தன்)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காலை 7.30 மணி. புதுவித வைத்திய பரிசோதனைக்காக நான் இன்னும் சில நோயாளிகலோடு காத்திருக்கிறேன்.

'இலக்கம் ஐந்து' அங்கு நின்றிருந்த வைத்தியசாலை சிற்றூழியரின் குரல் கேட்டு எனது இலக்கத்தை சரி பார்த்துக்கொள்கிறேன். எனக்கு பத்தாவது இலக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ தடவை நான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருக்கிறேன். ஆனால் இன்று எனக்கு மேற்கொள்ளப்போகும் பரிசோதனையை நினைக்கும் போது நெஞ்சு படக்கு படக்கென்று அடித்துக்கொள்கிறது.

நேற்று திங்கட்கிழமை பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு விட்டு கறிவாங்க சந்தைக்குப் போயிருந்தேன். அங்கு மீன் சந்தை கழுவித் துடைத்தது போல் இருந்தது. வழமையாக மீன் விற்கும் வியாபாரிகளைக் காணவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருந்தார்கள். கடந்த சில நாட்களாக கடலில் தாழமுக்கம் உருவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்திருந்தது. அதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. சந்தையில் கடல் மீனுக்கு தட்டுப்பாடாக இருந்தது. மீன் வாங்காமல் மரக்கறி மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

மனைவி இலைக் கஞ்சி காய்ச்சி வைத்திருந்தாள். 'சுகருக்கு நல்ல சாமான் குடிங்கப்பா..' என்று அன்பாக தந்தாள். நான் மனைவி கஞ்சிக்குள் போட்டிருக்கும் இலைகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். அது தூதுவிளா, முல்லை, முருங்கை என மூன்று இலைகளின் கூட்டாக இருந்தது. அதற்குள் மஞ்சள் தூள், உள்ளி, வெந்தயம், பச்சை மிளகாய் போட்டு காய்ச்சி இருந்தாள். அவளின் கைப்பக்குவத்தில் இலைக்கஞ்சி நல்ல ருசியாக இருந்தது. குடித்து முடித்ததும் வியர்த்தது. மின் விசிறியைப்போட்டு விட்டு மண்டபத்திற்குள் கிடந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டேன்.

நெஞ்சுக்குள் சுளிரென்று லோசாக குத்துவது போல் இருந்தது. மழையில் நனைந்ததால் தலைக்குள்ளும் இடித்துக்; கொண்டேயிருந்தது. மனைவி 'என்னப்பா ஒரு மாதிரி இருக்கையள்'. கேட்டு விட்டு கிட்ட வந்து என் கழுத்துக்குள் அவள் புறங்கையை வைத்து காய்ச்சல் பார்த்தாள். 'எனக்கு காய்ச்சல் இல்லப்பா.. தலையிடியும், நெஞ்சுக்குள்ள நோவுகிற மாதிரியும் இருக்குது' என்றேன். அவள் சித்தாலேப எடுத்துக் கொண்டு வந்து என் நெற்றியிலும், நெஞ்சிலும் போட்டு தேய்ச்சு விட்டாள். பிறகு கடும் தேயிலைச்சாயம் போட்டு அதற்குள் தேசிப்புளி, கொஞ்சம் சீனி விட்டு கலக்கி குடிக்கத்தந்தாள். என் மனைவி எது போட்டுத்தந்தாலும் தேவாமிர்தமாக இருக்கும். அவளின் சமையல் என்றால் எல்லோருக்கும் விருப்பம் அதிகம்.

தேசிப்புளி சாயத்தை தந்துவிட்டு குசினிக்குள் சென்று மதியச் சாப்பாட்டிற்குரிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். இடையிடையே என்னை எட்டிப்பார்த்து 'இப்ப எப்படியப்பா.. இருக்குது?' எனக்கேட்டுக் கொண்டே இருந்தாள். பள்ளிவிடும் நேரம் பிள்ளைகளையும் ஏற்றப்போகவேணும். தலையிடி குறைந்தபாடில்லை. மோட்டார்ச் சைக்கிள் ஓடுவதற்குப் பயமாக இருந்தது. பக்கத்து வீட்டு ஆட்டோக்கார அண்ணனுக்கு போன் எடுத்து பிள்ளைகளை ஏற்றிவரச் சொல்லிவிட்டு இருந்து விட்டேன்.

அன்று மதியச்சாப்பாடு கூட சாப்பிடவில்லை. ரெண்டு வாய்ச் சோறு அள்ளிவைக்கும் போது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. மனைவி 'ஊருக்குள்ள இருக்கிற வைத்தியரிட்ட ஒருக்கா காட்டிப்பார்ப்போமா? எழும்பி ஒரு தரம் தம்பியோட போயிற்று வாங்களன்' என்றாள்.
'கொஞ்சம் பொறு இண்டைக்கு பார்த்திட்டு நாளைக்குப் போகலாம்' என்றேன். அவள் விட்டபாடில்லை. பின் மச்சானோடு மோட்டார்ச்சைக்கிளில் சென்று ஊருக்குள் இருக்கும் பிரபலமான வைத்தியரிடம் காட்டி மருந்தெடுத்து வந்தேன்.

மாலை நேரம் மனைவி துளசி இலை, மஞ்சள் தூள், இஞ்சி, தேசிக்காய் போட்டு கொதிக்க வைச்சு சுடுதண்ணி ஆவிபிடிக்கத் தந்தாள். ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு வாய், மூக்கு வழியாக நன்றாக மூச்சிழுத்து வியர்த்து வழியும் வரை ஆவி பிடித்தேன். கொஞ்சம் தலைப்பாரம் குறைந்தது போல் இருந்தது.
இரவு ரெண்டு இடியப்பம் வாழைப்பத்தோடு சாப்பிட்டேன். 'என்னப்பா குழந்தைப் பிள்ளைகள் மாதிரி ரெண்டு இடியப்பம் சாப்பிடுறீங்க. நீங்க மத்தியானமும் சோறு சாப்பிடல்ல. நல்லாச் சாப்பிடுங்களன்' என் பக்த்தில் இருந்து மனைவி கதைச்சிக் கொண்டிருந்தாள்.

'விடப்பா.. இவ்வளவும் போதும். உடம்பு நல்லா வந்ததும் சாப்பிடுறேன்' என்றேன். இரவு நான் வழமையாகப் பார்க்கும் நாடகம் கூடப் பார்க்கவில்லை. நேரத்தோடு படுக்கை;குச் சென்று விட்டேன்.

காலையில் என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையாக தலையிடித்துக் கொண்டேயிருந்தது. மனைவி 'நேற்று காட்டி எடுத்த மருந்துக்கும் குறையவி;ல்லை என்டால் ஒருக்கா ஆஸ்பத்திரிக்குப் போய்க்காட்டிப் பார்ப்பம். எழும்பி வெளிக்கிடுங்கப்பா. நான் தம்பிக்கு போன் பண்ணுறன்' என்றாள்.

எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போறதை நினைச்சாத்தான் பயம். அந்தப் பரிசோதனைக்கு, இந்தப் பரிசோதனைக்கு எண்டு கையில் ஊசி குத்தி இருக்கிற ரெத்தமெல்லாம் உறுஞ்சி எடுத்திருவானுகள். அதுவும் இந்தக் காலம் தலையிடி, காய்ச்சல் எண்டு போனா  படாதபாடுபட வேண்டியிருக்கும். நான் ஏன் மற்றவர்களுக்கு கஸ்டத்தைக் கொடுக்கவேணும் என நினைத்தே ஆஸ்பத்திரிக்குச் செல்வதைத் தவிர்த்தேன். மனைவியின் அரியண்டம் பொறுக்க முடியாமல் இருந்தது. கடைசியில் அரை மனதுடன் ஆஸ்பத்திரிக்குச் செல்ல சம்தித்தேன்.

நான், மனைவி, மச்சான் மூவரும் ஆட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு அருகிலுள்ள கல்முனை வைத்தியசாலைக்கு சென்றிருந்தோம். எனக்கு தலையிடி, நெஞ்சு நோவு என்று சொன்னதும் என்னை வேறு ஒரு அறையில் இருக்கச் சொன்னார்கள். அங்கு என்னைப் பரிசோதித்த வைத்தியர். 'உங்களுக்கு கொரோனாக்குரிய அறிகுறிகள் தெரிகிறது. எதற்கும் சின்ன டெஸ்ட் செய்து பார்க்கவேணும்' என்றார். இதுக்குத்தான் நான் ஆஸ்பத்திரிப்பக்கம் வரமாட்டேன் என்றேன் என மனத்திற்குள் எண்ணியவாறு மனைவியையும்;, மச்சானையும் எட்டிப்பார்த்தேன். அவர்கள் இருவரும் பரீட்சை முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்கள் போன்று பதட்டத்துடன் இருந்தார்கள்.

மீண்டும் வைத்தியர் கதைச்சார் 'உங்களை மட்டக்களப்புக்கு அனுப்பி பி.சி.ஆர் எடுக்கப்போறம் பயப்படாமல் போய்வாங்க. இது உங்கள் நலனுக்காகத்தான் செய்கிறோம்' ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கென வந்த பிறகு மறுக்க முடியுமா? நான் அவர் சொன்னதற்கு தலையாட்டினேன்.

மனைவியை அருகில் அழைத்தேன் 'நீ ஒன்றுக்கும் பயப்படாதே. எனக்கு அப்படி எதுவும் இருக்காது. வீட்டில் பிள்ளைகள் தனியே இருக்குதுகள். நீ போய் அதுகளப்பாரு. நான் டெஸ்ட் எடுத்திட்டு திரும்பி வந்திடுவேன்' என்றேன். அதற்குள் அம்புலன்ஸ் வண்டி வந்து விட்டது. அதனுள் ஏறிக்கொண்டேன். மனைவியும், மச்சானும் வீட்டிற்குச் சென்றார்கள்.

நான் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்து மனைவிக்கு போன் எடுத்தேன். 'என்னப்பா.. செய்கிறாய்? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? வீட்டிற்கு யாராவது வந்தார்;களா?' இவ்வளவு தான் கேட்டிருப்பேன். மனைவி தேம்பித்... தேம்பி... அழுதாள். 'என்னப்பா நடந்தது சொல்லேன்' படபடப்புடன் கேட்டேன்.
'நான் உங்களை ஆஸ்பத்தியில் இருந்து அம்புலன்சில் அனுப்பிட்டு வீட்டுக்கு வரும்போது பிள்ளைகள் கேற்றடியில் என்னைப் பார்த்துக் கொண்டு நிண்டதுகள். அம்மா.... அப்பா எங்க எண்டு கேட்டதுகள். அப்பாவ ஒரு டெஸ்ட் எடுக்க மட்டக்களப்பு அனுப்பியிருக்காங்க எண்டு சொன்னேன். கொஞ்ச நேரம் கழிச்சு நம்மட கேற்றுக் கதவில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. போய்த் திறந்து பார்த்தேன். வெத்திலை சப்பி காவி படிந்த பற்களுடன் இவள் பக்கத்து வீட்டு பம்மாத்துப் பாக்கியம் நின்றாள். என்ன  புள்ள உன்ட புருஷனுக்கு கொரோனாவாம் ஊருக்குள்ள கதைக்கிறாங்க. உன்னையும், புள்ளைகளையும் தனிமைப்படுத்தி வைச்சிருக்காமே! உண்மைதானா? எண்டு கேட்டாள். அவள் சொன்னதக்கேட்டு எனக்கு தூக்கிவாரிப் போட்டது போல் இருந்தது. நான் பட்டென கதவைச் சாத்தி விட்டு வந்திட்டன். பார்த்தீ;ங்களா உண்மை தெரியாமல் இந்தச் சனம் எப்படியெல்லாம் கதைக்குதுகள்' என்று விட்டு முணகி முணகி அழுதாள்.

' விடப்பா இந்த ஊர்ச்சனம் ஒன்றென்றால் அதை பத்தாக்கி கதைக்கும். அதுவும் பம்மாத்துப் பாக்கியத்தைப் பற்றி உனக்குத் தெரியும்தானே? நீ எதுவும் யோசிக்காதே. பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடு அதுகள் பசி தாங்காது. நீயும் சாப்பிடு. நம்ம கும்பிடுற மாணிக்கப்பிள்ளையார் கைவிட மாட்டார். நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.' மனைவியை ஆறுதல் படுத்திவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.  

அவள் பம்மாத்துப் பாக்கியத்துக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறேன். அவளின் கணவன் நல்லசிவம் விபத்து ஒன்றில் கால் முறிந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த போது என்னிடம் வந்து தனது கணவனைக் காப்பாற்றுமாறு அழுது கேட்டிருந்தாள்.  அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முழுச் செலவையும் பொறுப்பெடுத்து முன்னின்று செய்தவன் நான்;. நல்லசிவம் நல்ல மனிசன். பண்பாடு தெரிந்தவன். ஆனால் அவனுக்கு நேர் எதிர்க் குணம் கொண்டவள் பாக்கியம். ஊருக்குள் அங்கு கதைப்பதை இங்கும், இங்கு கதைப்பதை அங்கும் என காவித்திரிந்து மற்றவர்களுக்குள் கோள்மூட்டிவிட்;டு வேடிக்கை பார்ப்பதில் அவளுக்கு அப்படியென்ன அங்கலாய்ப்பு என்று தெரியவில்லை. தானாக ஒன்றைக் கற்பனை பண்ணிக்கொண்டு ஊருக்குள் வதந்தியைப் பரப்பி சிலரிடம் வயிறு வளர்ப்பதில் சிறிதும் கூச்சமில்லாதவள். பம்மாத்துப் பாக்கியத்தை வைத்து சிலர் மறைமுகமாக  அவர்களுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி கண்டதையெல்லாம் கதை கட்டி உலாவ விட்டு தங்களுடைய மனவிகாரங்களை நிறைவேற்றியும் கொள்கிறார்கள். நான் வைத்தியசாலைக்கு வந்து சில மணி நேரங்கள் ஆகிய நிலையில் எனக்கு கொரோனாவாம் என்ற வதந்தி ஊரெல்லாம் வலம் வந்து பீதியைக் கிளப்பியிருந்தது. இனி பம்மாத்துப் பாக்கியத்திற்கு எந்த உதவியும் செய்வதில்லை என நினைத்துக் கொண்டேன்.

'இலக்கம் பத்து' அங்கிருந்த வைத்தியசாலை சிற்றூழியரின் குரல் கேட்டு மெல்ல எழுந்து அங்கிருந்த பிரத்தியோக பரிசோதனை அறைக்குள் சென்றேன். அங்கு என்னிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்குரிய மாதிரியை பெற்றுக்கொண்டார்கள். அங்கிருந்த வைத்தியர் சொன்னார். ' நீங்க போகலாம். உங்கட பி.சி.ஆர் முடிவு நாளைக்கு வரும். பயப்பிடாமல் இருங்க. உங்களுக்கு நல்ல முடிவுதான் வரும். முடிவு வந்ததும் வீட்டுக்குப் போகலாம்'. என்றார்.

மீண்டும் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் அறைக்குள் சென்று அமர்ந்து கொள்கிறேன். என் எண்ணம் எல்லாம் வீட்டைச் சுற்றியே சுழன்றது. தற்செயலாக எனக்கு கொரோனா பொசிட்டிவ் என்று முடிவு வந்தால் என்ன செய்வது? ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்குது. என்னிடம் சேமிப்பு என்று எதுவுமில்லை. அன்றைக்கு உழைத்து அன்றைக்கே செலவளிக்கும் அன்றாடம் காய்ச்சிதான் என் குடும்பவாழ்க்கை. ஜஸ் கிறீம் வியாபாரத்திற்கு எடுத்த வாகனத்திற்கு மாதம் முப்பதாயிரம்  லீசிங் கட்டவேணும். ஒரு மாதம் லீசிங் கட்டாவிட்டாலும் வட்டிக்கு மேல் வட்டி போடுவானுகள். இல்லாவிட்டால் வாகனத்தை தூக்கிட்டுப் போய்விடுவானுகள். மனைவி எடுத்துத் தந்த மாதர் சங்க லோனுக்கும், மணி அக்காவிடம் வட்டிக்கு வாங்கிய காசுக்கு வட்டிக்காசு என்று பத்தாயிரம் கட்டவேணும். மழை பெய்தால் ஒழுகும் வீடு. மூத்த பிள்ளைக்கு ஒரு வீடு கட்டவேணும். அவளுக்கு நல்லதொரு மாப்பிள்ளை பார்த்து கலியாணம் கட்டி வைக்கவேணும்.  மனைவிக்கு ஒரு நகை நட்டாவது வாங்கிக் கொடுக்கோணும். இன்னும் தலைக்கு மேல் எவ்வளவோ குடும்பச் சுமை நிறைந்து கிடக்கிறது. இவற்றை எலலாம் நினைத்து தற்போது பெருமூச்சு விடுவதைத்தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

'கடவுளே எனக்கு நல்ல முடிவு வந்திடோணும்'. மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.
வைத்தியசாலையில் இருக்கும் நாட்கள் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது. எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடன் அப்படியே தூங்கிப்போனேன்.

அடுத்தநாள் முடிவு வந்தது. மனைவிக்கு போன் எடுத்து பேசுவோமா? என நினைத்தேன். ச்சீ.. இப்போ சொல்லக்கூடாது. என் போனை எதிர்பார்த்து தவம் கிடப்பாளே. மனசு கேட்கவில்லை. வீட்டிற்க்கு போன் எடுத்து முடிவைச் சொல்லலாம் என போனை கையில் எடுத்தேன். போன் பெற்றியில் சார்ஜ் இல்லை. 'ச்....சே... இந்த நேரம் பார்த்து சார்ஜ் இறங்கிட்டே எல்லாம் சந்தர்ப்பத்திற்கு கழுத்தறுக்குது'. நொந்து கொண்டேன்.

இரு மணி நேர பயணத்தின் பின் என் வீட்டுக்கேற்றைத் தட்டினேன். மூத்த மகள் வந்து கேற்றைத் திறந்தாள். 'அப்..பா..'  கத்தியவாறு என்னை அணைத்துக் கொண்டாள். 'அம்..மா... அம்மா... அப்பா வந்திட்டார்'. மகள் கத்திய சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மனைவியும், ரெண்டாவது மகளும் ஓடிவந்தார்கள். என்னைப் பார்த்து கண்கலங்கியபடி நின்ற மனைவி, பிள்ளைகளை அணைத்தவாறு வீட்டிற்குள் சென்றேன்.

'எனக்கு செய்த பி.சி.ஆர் பரிசோதனையில் நெகடிவ் என்று முடிவு வந்திருக்குது. கொரோனா அறிகுறி இல்லையாம். அதனால் வீட்டிற்குப்போகச் சொல்லிட்டாங்க' என்றேன். 

மனைவி சுடச்சுட தேத்தண்ணி ஊத்தி தந்துவிட்டு 'வாங்கப்பா பிள்ளையார் கோவிலுக்குப் போய் கும்பிட்டு விட்டு தேங்காய் உடைச்சிட்டு வருவோம்' என்றாள். எனக்கு கிரகம் ஒன்று கழிந்தது போல் இருந்தது. நன்றாக தலைமூழ்கி விட்டு குடும்பத்தோடு கோயிலுக்குச் செல்கிறேன். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |