மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.
அத்துடன், தற்போது காணப்படும் மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் செயற்படுவது அவசியமாகும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாத தரப்பினருக்கு, குறிப்பிட்ட தேர்தல் வாக்கெடுப்பு தினத்துக்கு முன்னதாகவே வாக்களிக்கும் வகையில் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோர் உள்ளிட்ட தரப்பினருக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
தேர்தல்கள் சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவினால் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட சில கட்சிகளின் செயற்பாடுகள், குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, அவ்வாறான கட்சிகளை குறிப்பிட்ட மாகாணங்களுக்காக மாத்திரம் பதிவு செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments: