தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதனால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு மேலும் 3 நாட்களுக்கு அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அப்பகுதி விடுவிக்கப்படுவதா அல்லது தொடர்ந்தும் முடக்கத்தில் வைத்திருப்பதா என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்திற்கமைவாக அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் எழுமாறாக இன்னும் பல இடங்களில் மேற்கொள்ளப்படுவது எனவும் அதன் முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் பட்சத்தில் முடக்கப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு விடுவிப்பது தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 15 ஆந்திகதிவரை இப்பிரதேசம் முடக்கநிலையில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதனால் எதிர்வரும் 18 ஆந் திகதி வரை இது நீடிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்படும் எழுமாறான பரிசோதனை முடிவுகளின்படி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையாவிடின் தொடர்ச்சியாக மேலும் மூன்று வாரங்களுக்கு அப்பகுதி முடக்கநிலையில் இருக்குமென அரசாங்க அதிபர் கருணாகரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments