இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4பேர் உயிரிழந்துள்ளமை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 47 வயதான ஆணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியா தாக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று குருணாகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான ஆணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 57 வயதான பெண்ணொருவரும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவருக்கு சிறுநீரக நோய் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 53 வயதான ஆணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் குருதி விசமடைந்தமை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்று மாத்திரம் புதிதாக 670 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக காணப்படுகின்றது.
அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 480 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இதுவரை 43 ஆயிரத்து 747 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 901பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: