'பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வழக்கம்' என்கிறனர் பெரியோர். அந்த வகையில் நாம் அனைவரும் புதிய 2021 ஆம் புதிய ஆண்டில் கால்தடம் பதித்துள்ளோம். இவ் வருடமும் ஒவ்வொரு வருடங்களைப்போன்றும் நோயற்ற வாழ்க்கை சாந்தி, சமாதானம், நல்வாழ்வு என்பவற்றில் மிகுந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உலகம் கொரோனாவோடு போரடிக்கொண்டிருக்கின்றது. கொரோனாவுக்கான தடுப்பூசியை மிகுந்த ஆவலோடு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் 2021 இல் கால்தடம் பதித்துள்ளோம்.
'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும்'
என்ற பகவத்கீதையின் தத்துவத்தை மனதில் இருத்தி எமது இலக்குகளை நோக்கி நாம் முன்னேறவேண்டும்.
காலங்கள்யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதுதன் பாட்டுக்கு ஓடிக்கொண்டேயிருக்கும். காலங்களுக்குப் பின்னால் நாம் தான் ஓடவேண்டும். எமது வளர்ச்சியும், எழுச்சியும்தான் எம்மைப் பற்றிய பதிவுகளை இவ்வுலகத்தில் விட்டுச் செல்வதற்கு வழிவகுக்கும்.
ஒவ்வொரு புதுவருடம் பிறக்கின்ற போதும் பில்லியன் கணக்காண மக்கள் புதுவருட சபதத்தை எடுக்கின்றனர். இவ்வருடத்திலாவது எனது கஷ்டங்கள் தீரவேண்டும். என் இலட்சியம் நிறைவேற வேண்டும். நான் இன்றிலிருந்து புது மனிதனாக வாழவேண்டும் என இன்னும்பல வேண்டுதல்களுடனும், சபதத்துடனுமே புதுவருடத்தை எதிர்கொள்கின்றனர்.
இருந்தும் என்னபயன்! பழைய குருடி கதவைத்திறடி என்பதைப்போலவே இச் சபதங்களில் பெரும்பாலானவை ஐனவரி மாதம் முடிவதற்கிடையில் காணாமல் போய்விடுகின்றன. புதுவருடத்தில் ஐனவரி முதலாம் திகதி எடுக்கப்படும் சபதங்களில் 25 வீதமானவை ஐனவரி முதல் வாரம் முடிவதற்கிடையில் நினைவில் இருந்து அழிந்து விடுகின்றது. ஏனையவை வருடம் முழுவதும் நினைவில் நிற்பதென்பது அசாத்தியமானதாகவே காணப்படுகின்றது.
இது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட எழுத்தாளர் ரொம்கன்னெலின் இச் சபதங்கள் நினைவில் நிற்காமைக்கான மூன்று காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
சிறிய வெற்றிகளில் இருந்து கிடைக்கும் உந்து சக்தியின் மூலம் ஏனைய வெற்றிகளுக்கான உற்சாகத்தைப் பெறுவதற்கு சில தந்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.
வெற்றிக்கான உந்துதலைப் பெறுவதில் மட்டுமே சார்ந்திருக்கும் தன்மை சபதம் குறித்த முயற்சிகளை மறைத்து வருகின்றது. அடுத்து யதார்த்தத்துக்கு பொருந்தாத பெரியளவிலான இலக்குகளை மட்டும் சிந்திப்பதானது. சபதங்களை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கைகள் மங்குவதற்கு வழிவகுக்கின்றது.
மேலும் சில சாதகமான மாற்றங்கள் கூட அசௌகரியங்களைத் தரலாம் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளத்தவறுவதன் மூலம் சபதங்கள் குறித்த சிந்தனைகள் பின்னோக்கி நகர்த்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நீங்கள் எடுக்கின்ற புதுவருட சபதங்கள் தோல்வியடையாமல் இருப்பதற்கான தீர்வுகளையும் முன் வைத்துள்ள ஆராய்ச்சியாளர்கள் மக்கள் இவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட்டால் புதுவருட சபதங்களை நிறைவேற்றக் கூடியதாக இருப்பதுடன் அவ்வருடம் வெற்றிகரமானதாகவும் அமையுமென தெரிவித்துள்ளனர்.
அதாவது முதலில் நீங்கள் நிறைவேற்ற விரும்புவற்றை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள். குறிப்பாக மூன்று முக்கிய இலக்குகளை தெரிவு செய்து அவற்றில் உங்கள் கவனம் முழுவதையும் செலுத்துங்கள்.
அடுத்து அதிக தகவல்களை சேகரித்து நினைவில் வைத்திருப்பதை தவிருங்கள். உங்கள் இலக்குகளை நிறைவேற்றத் தேவையான தகவல்களை மட்டும் தெரிவு செய்து மனதில் பதியுங்கள். அடுத்து இல்லை என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எமது கவனத்தைச் சிதறச் செய்யும் வகையிலான தேவையற்ற விடயங்களைத் தவிர்ப்பது வாழ்க்கையின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பிறந்துள்ள 2021ஆம் ஆண்டாவது உங்கள சபதங்களை நிறைவேற்றும் மகிழ்ச்சிகரமான ஆண்டாகவும், ஆச்சரியமிக்க ஆண்டாகவும் மலரட்டும்.
0 Comments