Home » » மட்டக்களப்பு ஊடகத்துறை வரலாற்றில் சுகுணம் ஜோசப் என்ற ஆளுமை -இரா.துரைரத்தினம்

மட்டக்களப்பு ஊடகத்துறை வரலாற்றில் சுகுணம் ஜோசப் என்ற ஆளுமை -இரா.துரைரத்தினம்

 


ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பாட்டாளராக தமிழ் தேசிய விடுதலையை பற்றுறுதியோடு நேசித்த அரசியல்வாதியாக பல தடங்களை பதித்த ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இரத்தம் புனித மரியாள் காலடியில் சிந்தப்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் கடந்து விட்டன.

ஜோசப் போன்ற ஆளுமைகளை மட்டக்களப்பு அரசியல் தளத்திலிருந்து அதற்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் தளத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜோசப் பரராசசிங்கம் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு நீதி கிடைக்கும் என இலங்கையின் அரசியல் நிலவரங்களை அறிந்த யாரும் நம்ப மாட்டார்கள்.

ஜோசப் பரராசசிங்கம் என்ற அரசியல்வாதியை விட சுகுணம் ஜோசப் என்ற ஆளுமை மிக்க ஊடகவியலாளர் பற்றி இன்றைய இளைய தலைமுறை ஊடகவியலாளர்கள் அறிந்து கொள்வது பல விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் அரசியல்வாதியாக மக்கள் மத்தியில் அறியப்படுவதற்கு முதலே ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பாட்டளராக அறியப்பட்ட ஒருவர்.

1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். அவர் நேரடியாக அரசியலுக்குள் பிரவேசித்தது 1989ஆம் ஆண்டில் தான்.

அதற்கு முதல் 1956ஆம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்ற போது 22வயது இளைஞராக அதில் கலந்து கொண்ட அனுபவங்களை அவர் சொல்லி கேள்ளிப்பட்டிருக்கிறேன்.

அக்காலம் தொடக்கம் அவர் இறக்கும் வரை அரசியல் நிலைப்பாட்டிலும், கொள்கையிலும் எந்த தளம்பலோ மாற்றங்களோ ஏற்பட்டதில்லை.

குணசேனா நிறுவனத்தின் தினபதி பத்திரிகை தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான ஒன்றல்ல. எனினும் அப்பத்திரிகையின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றிய ஜோசப் தினபதி பத்திரிகை நிர்வாகத்திற்கு வளைந்து நின்றவர் அல்ல.

ஜோசப் பரராசசிங்கம் என்ற அரசியல்வாதியை விட சுகுணம் ஜோசப் என்ற ஊடகவியலாளர் மக்கள் மனங்களில் மதிப்பு மிக்கவராக திகழ்ந்தார்.

1980ஆம் ஆண்டுகளின் பின்னர் படையினரின் கெடுபிடிகள், கைதுகள் அதிகரித்து வந்த காலம். கைது செய்யப்படும் இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடுவித்த சம்பவங்கள் பல உண்டு. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களின் விபரங்களை சேகரித்து மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வருவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

1980களில் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பட்டாளர்கள் என்ற வரையறைக்குள் மட்டும் நின்று சலசலப்பின்றி பல விடயங்களை அவர் சாதித்திருக்கிறார்.

அவர் ஊடகவியலாளராக பணியாற்றிய காலம் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காலம் அல்ல. புலனாய்வு செய்திகளை எழுத விரும்பும் இன்றைய இளம் ஊடகவியலாளர்கள் ஜோசப் அவர்களின் 'சூறாவளி பூராயம்' என்ற கட்டுரைத்தொடரை படிக்க வேண்டும்.

1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி வீசியது. அதனை தொடர்ந்து மக்களுக்கு வந்த நிவாரணங்கள், புனரமைப்பு பணிகளில் சூறாவளியை போல பெரும் மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றன.

இந்த ஊழல்கள் மோசடிகளில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் செல்லாக்கில் இருந்த அரச உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். மில்லியன் கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த ஊழல் மோசடி விபரங்களை மிக துல்லியமாக திரட்டி ஆதாரத்துடன் சூறாவளி பூராயம் என்ற தலைப்பில் சிநதமணி வாரப்பத்திரிகையில் தொடராக எழுதினார். மக்கள் அறிந்திருக்காத பல தகவல்களை மக்கள் மன்றத்தில் வைத்து அரசியல்வாதிகள் அவர்களின் எடுபிடிகளாக இருந்து ஊழல் மோசடிகளை செய்த அரச அதிகாரிகள் ஆகியோரின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டன.

நிவாரணத்திற்கென வந்த பணம் புனரமைப்புக்கு என வந்த பணம் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது. காசோலைகள் எவ்வாறு மாற்றப்பட்டது. அந்த விபரங்கள், கோவை இலக்கங்கள் என மோசடிகளின் முழு விபரங்களும் அத்தொடரில் வெளியாகியது.

ஜோசப் அவர்கள் எவ்வாறு இந்த தகவல்களை துல்லியமாக பெற்றார் என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

நிவாரணத்திற்கென வந்த பொருட்கள் லொறி லொறியாக விற்கப்பட்டன. உதாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென ஐந்து லொறிகளில் கொண்டுவரப்பட்ட பால் மா பக்கற்றுக்கள் ஐஸ் கிறீம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிற்கு விற்கப்பட்டது. இந்த விடயம் வெளியில் தெரியவந்து பிடிபட்ட போது பால் மா விற்கப்படவில்லை. ஐஸ் கிறீம் தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைத்திருந்தோம் என மோசடி செய்த அதிகாரி தெரிவித்தார். அவரை ஆளும் கட்சி அரசியல்வாதி காப்பாற்றி விட்டார்.

'சூறாவளி பூராயம்' கட்டுரை தொடரின் மூலம் சில அரசியல்வாதிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டன. இதனால் ஆளும் தரப்பு செல்வாக்குள்ள அரச அதிகாரிகளின் பகையையும் ஜோசப் அவர்கள் சம்பாதித்து கொண்டார்.

ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஜோசப் அவர்கள் இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக ஆசானாக திகழ்ந்தார் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

1983ஆம் ஆண்டு மட்டக்களப்பு சிறை உடைப்பு நடைபெற்று தமிழ் அரசியல் கைதிகள் மீட்டெடுக்கப்பட்டு மறைவிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட போது இளம் ஊடகவியலாளராக இருந்த எமக்கு நாம் திரட்டிய அறிந்த தெரிந்த விடயங்களை செய்திகளாக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது.

அந்த வேளையில் என்னைப்போன்ற இளம் ஊடகவியலாளர்களுக்கு ஜோசப் அவர்கள் கூறிய அறிவுரையே ஊடகவியலாளர்களுக்கு சமூக பொறுப்பு அவசியம் என்பதை உணர்த்தியது.

நாம் வெளியிடும் செய்திகளால் சிறையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட கூடிய அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது. நாம் இவ்வேளையில் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என இளம் ஊடகவியலாளர்களான எமக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜோசப் அவர்கள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் என்பதற்கு இரு சம்பவங்களை குறிப்பிட முடியும்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்களின் நெருங்கிய நண்பரான ஜோசப் அவர்கள் 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அவரின் வெற்றிக்காக உழைத்தார். அதன் பின்னர் இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி ஆளும் கட்சியின் பக்கம் சேர்ந்த போது அவரின் ஆதரவாளர்கள் சிலர் ஆளும் கட்சியாளர்களாக மாறினர். ஜோசப் அவர்களும் இராசதுரையின் பக்கமே இருப்பார் என பலரும் எதிர்பார்த்தனர்.

இராசதுரை தமிழ் தேசிய விடுதலை என்ற கொள்கையிலிருந்து விலகி செல்லலாம். ஆனால் என்னால் அந்த கொள்கையிலிருந்து விலக முடியாது என உறுதியாக இருந்தார்.

இரண்டாவது சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்று தனியாக இயங்க போவதாக அறிவித்த போது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையை தவிர வேறு யாரின் தலைமையையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியாக தன்னுடைய முடிவை அறிவித்தார்.

அந்த நிலைப்பாட்டால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோற்கடிக்கப்படுவேன் என்று தெரிந்த போதிலும் தன்னுடைய கொள்கையிலிருந்து அவர் விலகவோ சமரசம் செய்து கொள்ளவோ இல்லை.

1980களின் பின் தமிழ் ஊடகவியலாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கிய காலங்களாகும். பிராந்திய செய்தியாளர்களுக்கான சங்கம் ஒன்றை உருவாக்கிய பெருமையும் ஜோசப் அவர்களையே சாரும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் பத்திரிகையாளர்களை இணைத்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்ற பெயரில் கிழக்கில் உள்ள பிராந்திய பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றையும் உருவாக்கினார்.

பின்னாட்களில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பலமான அமைப்பாக செயற்பட்டது. பல அரசியல்வாதிகளையும் உருவாக்கியிருக்கிறது. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பலமான அமைப்பாக திகழ்வதற்கு அடித்தளம் இட்டவர் ஜோசப் அவர்கள் தான்.

எந்த அரசியல்வாதிகளுக்கும் விலைபோகாத அடிபணியாத சுகுணம் ஜோசப் என்ற ஊடக ஆளுமை விட்டு சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |