Advertisement

Responsive Advertisement

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மிக விரைவில் வழமை போன்று சாதாரணமாக இயங்கும்

 

(பாறுக் ஷிஹான்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட 3 தாதியர்கள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் மிக விரைவில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வழமை போன்று சாதாரணமாக இயங்கும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

நேற்று(11) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொவிட் - 19 தொற்றாளாராக இனங்காணப்பட்ட 80 வயதுடைய மேற்படி நபர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது மட்டக்களப்பு பகுதியில் மரணமடைந்துள்ளார். இவ்வாறு இருந்த போதிலும் மிக விரைவில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வழமை போன்று சாதாரணமாக பொதுமக்களின் பாவனைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உண்மையில் இளைஞர்களையும், சுகதேகிகளையும் இந்த நோய் இலகுவாக கடந்து சென்றாலும் முதியவர்களையும், நாட்பட்ட வியாதிகளைக் கொண்டவர்களையும் பல்வேறு முறையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் இலகுவாக இந் நோய் தாக்குகின்றது.

சுகாதார துறையினரால் மாத்திரம் இந்த நோயினை நூறு சதவீதமாக கட்டுப்படுத்திவிட முடியாது. சுகாதார துறையுடன் இணைந்ததாக பொது நிர்வாகத் துறையினர், உள்ளூராட்சி மன்றங்கள், பொலிசார், முப்படையினர், ஊடகவியலாளர்கள், மிக முக்கியமாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிர்வுகின்ற அல்லது தீர்மானிக்கின்ற நீதிமன்றங்கள் எங்களோடு இணைந்ததாக செயற்பட்டுக்கொண்டு இருப்பதுடன் எமது பிராந்திய பணிமனையின் சகல நடவடிக்கைகளுக்கும் ஊன்றுகோலாக நீதிமன்றங்கள் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments