நூருல் ஹுதா உமர்
முஸ்லிம் ஜனாஸாக்களும்,குழந்தைகளும் எரிக்கப்பட்ட போது அந்த எரிப்பை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாதா ? எனும் எனது மகனின் கேள்விக்கு விடையாகவே கல்முனையை சேர்ந்த சாகுல் ஹமீட் முஹம்மட் பௌஸ் (வயது-50) ஆகிய நானும் என்னுடைய மகன் பௌஸ் முகம்மட் நுஹ்மானும் அடையாள நடைபவனியை ஆரம்பித்தோம். என ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மகனுடன் நடைபயணம் மேற்கொண்ட கல்முனை நபர் தனது நடைப்பயணம் இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (28) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது கூறினார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
கொடூரமாக ஜனாஸாக்களை எரித்துவிட்டு பௌத்த மக்களின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து இந்த அரசாங்கமானது ஏன் அரசியல் செய்கின்றது. மண்ணால் படைக்கப்பட்ட எம்மை மரணித்த பின்னர் இந்த மண்ணில் அடக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் அனுமதி தர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தே கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை கால்நடையாக அமைதி வழி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். ஆனால் கல்முனை நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் படி பொலிஸாரால் நிறுத்தப்பட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று தனது அமைதி வழி போராட்டத்தினை நடாத்தி முடித்தேன்.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக எனது எட்டு வயது மகனுடன் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகளை நானும் மகனும் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றினை மகனால் கையளிக்கப்பட்டு நடைபவனியை ஆரம்பித்தேன். இதனை செய்யக்கூடாது மீறி செய்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உங்களை கைதுசெய்வோம் என்ற மிரட்டல்கள் வந்தது. வீட்டையும் சுற்றிவளைத்தனர் இப்படியான பல தடைகள் வந்தபோது என்னுடைய நண்பர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.
நடைபவனி போராட்டம் ஆரம்பித்த போது கல்முனை பொலிஸார் எங்களுக்கு நிபந்தனை விதித்து பாதுகாப்பு வழங்கினர். மக்கள் எங்களின் நடைபவனி போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் பாதையில் இருபக்கமும் நின்றிருந்தனர். எங்களை கல்முனை நகர மண்டபத்தின் அருகில் நிறுத்தி நீதிமன்ற கட்டளை தரப்பட்டது. பின்னர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் உதவியால் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பும் மகஜரை கையளித்தோம். ஜனாதிபதி அவர்கள் எங்களின் போராட்டங்களை மதித்து ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.
0 comments: