(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனையில் கொரோனா நிலைமை மோசமாகிவருகிறது. எனவே தொற்று கூடுதலாக இனங்காணப்பட்ட பகுதிகள் அடங்கலாக கல்முனைமாநகரை முற்றாக முடக்கி மக்களைக் காப்பாற்றுங்கள்.J
இவ்வாறு கோரும் மகஜரை கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் கல்முனை பிரதான பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித்பியந்த ஆகியோரைச் சந்தித்த பொதுமக்கள் பிரதிநிதிகள் கையளித்து வேண்டுகோள் விடுத்தனர்.
த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை சர்வாத்தசித்திவிநாயகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு.சச்சிதானந்தசிவக்குருக்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான வி.சிவலிங்கம் கே.செல்வராசா எஸ்.சந்திரன் ஆகியோர் சேர்ந்து இந்தச்சந்திப்பை மேற்கொண்டதுடன் பொதுஅமைப்புகளின் மகஜர்களையும் கையளித்தனர்.
சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் சுகுணன் பதிலளிக்கையில்:
முடக்கும் அதிகாரம் எம்மிடம்இல்லை. ஆனால் தொற்றுக்களின் விபரம் மற்றும் சந்தையின் ஆபத்தானநிலை தொடர்பாக நாம் எமது தலைமைக்கும் கொவிட்குழுவுக்கும் அறிவிப்போம். முடக்குவது தொடர்பாக அவர்களே தீர்மானிப்பார்கள் என்றார்.
மேயர் றக்கீக் பதிலளிக்கையில் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால் முழு மாநகரையும் முடக்குவதுபற்றி இன்னும் ஆராயவேண்டும். சுகாதாரம் பாதுகாப்புத்துறைகளும் ஆலோசனைதரவேண்டும். என்றார்.
அதற்கு குழுவினர் சார்பாக உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:
எல்லாவற்றையும் முடக்க கஸ்டமென்றால் எமது வடக்கு தமிழ்ப்பிரதேசங்களையாவது முடக்கி எமது மக்களைக்காப்பாற்றுங்கள் என்றார்.
மேயர் பதிலளிக்கையில் எதற்கும் கலந்துரையாடலை நடாத்தி முடிவுக்கு வருவோம் என்றார்.
நேற்றுமுன்தினம் மாலை கல்முனை விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் மேற்படி முடக்கல் கோரிக்கையை பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களிடம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 228 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 170பேரும் சாய்ந்தமருதில் 34பேரும் கல்முனை வடக்கில் 14பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 170 ஆக உயர்ந்துள்ளது.
0 comments: