Home » » கல்முனையில் 595 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...!!

கல்முனையில் 595 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...!!

 


கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் இதுவரையான காலப்பகுதியில் 595 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR மற்றும் Antigen பரிசோதனைகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 818 ஆக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வலயத்தில் ஆயிரத்து 985 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 120 பேரின் பி.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்படி தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க கேட்டரிங் நிறுவன பணியார்கள் 31 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிகார ஏபா தெரிவித்துள்ளார்.

மேலும், 324 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், வத்தளை பிரதேச பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீதுவை பிரதேசத்தில் உள்ள தங்குமிட விடுதியில் குறித்த 7 பேரும் தங்கியிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதே பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க – சீதுவ பொதுசுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த மேலும் 715 பேர் குணமமடைந்துள்ளனர்.

இதன்படி, அவர்கள் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், எண்ணாயிரத்து 229 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |