Home » » மட்டக்களப்பு - காத்தான்குடியில் 06 பேருக்கும் ; ஆரையம்பதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 40000ஐக் கடந்தது...!!

மட்டக்களப்பு - காத்தான்குடியில் 06 பேருக்கும் ; ஆரையம்பதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 40000ஐக் கடந்தது...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 372 ஆக கணப்படுகின்றது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 432 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்காலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 79 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, காத்தான்குடி பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் கொவிட் பரிசோதனையின் போது ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த ஆறுபேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி – கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டை பகுதியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, குறித்த இரண்டு பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க்பட்டுள்ளனர்.

இதனிடையே பதுளை பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பசறை பகுதியில் கடந்த 23 ஆம் திகதி பி சி ஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு எழுமாறாக முன்னெடுக்கபட்ட ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கபட்டுவரும் எழுமாறான ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகளில் குறித்த 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக, மேல்மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து செயற்படுமாறு இராணுவத்தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் தொடர்ந்தும் இவ்வாறு, எழுமாறான ரெப்பிட் என்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுமெனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட 551 பேரில், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 300 பேர் உள்ளடங்குவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின், பொரள்ளை பகுதியில் 87 பேரும், கொம்பெனித்தெரு பகுதியில் 30 பேரும், கிருலப்பனை பகுதியில் 29 பேரும், மருதானை மட்டக்குளி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் தலா 21 பேர் வீதமும் அடையாளம் கா ணப்பட்டுள்ளனர்.

மேலும், வெள்ளவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் தலா 10 பேரும், அவிஸ்ஸாவலை பகுதியில் 13 பேரும், ஏனையவர்கள் புதுக்கடை, கிராண்ட்பாஸ் கொள்ளுப்பிட்டி, தெஹிவலை, மஹரகம, நுகேகொடை மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 52 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 37 பேரும், கண்டி மாவட்டத்தில் 16 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 12 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தில் 27 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 28 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 17 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அக்கறைபற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், அக்கறைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் கடந்த 24 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய நாளில் 14 ஆயிரத்து 933 பி.சி.ஆர். பரிசோதானைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 11 இலட்சத்து 67 ஆயிரத்து 552 பி.சி.ஆர். பரிசோதானைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, முப்படையினரால் நடாத்திச்செல்லப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6 ஆயிரத்து 276 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |