கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை காத்திரமாக பிற்பற்றுமாறும், பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிமனையில் இன்று வியாழக்கிழமை(19) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இவ்ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மருத்துவர் எம்.அச்சுதன், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வீ.குணராஜசேகரம் மற்றும் சுகாதார உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 82பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 15 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 8 பேருக்கும், கல்முனைப் பிராந்தியத்தில் 22 பேருக்குமாக மொத்தம் 127 பேர் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (17) மூன்றுபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதில் ஒருவர் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒல்லிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும், மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவரும், அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்றில் ஒருவருமாக மொத்தமாக மூன்றுபேர் பீ.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
வெறுமனே சுகாதாரப்பிரிவினரும், பாதுகாப்பு பிரிவினருடைய நடவடிக்கைகள் மூலம் இத்தொற்றினை கட்டுப்படுத்த முடியாது. மாறாக பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பே மிகமிக அவசியமாகும். எங்களால் இயன்ற அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் 5 வைத்தியசாலைகளில் 881நபர்கள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் வீடு சென்றுள்ளார்கள். தற்போது 228பேர் சிசிச்சை பெற்று வருகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிசிச்சைக்காக மேலும் நான்கு வைத்தியசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையும், கல்முனையில் பாலமுனை பிரதேச வைத்தியசாலையும், அம்பாறையில் தமன பிரதேச வைத்தியசாலையும் மேற்படி கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளாக மாற்றப்படவுள்ளதாகவும்,
இவ்வைத்தியசாலையில் 450 பேர் பராமரிக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் எமது மக்கள் சமூகப்பற்றுடன் செயற்படுவது காலத்தின் தேவையாக இருப்பதுடன் வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசியமான பயணம் மேற்கொண்டு வருபவர்கள் தாமாகவே முன்வந்து தங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துமாறு பொறுப்பான சுகாதாரப் பிரிவினரை சந்தித்து அதனை வெளிப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களையும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களையும் இனங்கண்டு அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்படுகின்றன.
மேலும், தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும், முகக்கவசங்களை உரையாடல்களின் போது கட்டாயம் பயன்படுத்துமாறும், பயணங்களின் போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின் போது சரியான வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டதுடன்
பொதுமக்களின் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும் விதத்தில் சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்ட கொவிட்-19 விழிப்புணர்வு இறுவட்டு கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கும் மேற்படி வைத்திய உயரதிகாரிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: