நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தவரை அரசாங்கம் அபிவிருத்திக்குழு தலைவராக நியமித்ததன் மூலமாக அக்குற்றச்சாட்டிலிருந்து பிள்ளையானை தப்ப வைப்பதற்கு கோட்டபாய ராஜயபக்சவும், மகிந்த ராஜபக்சவும் கூட்டாக முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகமே எங்களுக்கு ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி அதிகாலை திருப்பலி ஒப்புக்கொடுக்கின்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜேசப்பரராஜசிங்கம் கலந்து கொண்டிருந்த போது பிள்ளையான் குழு என்கின்ற துணை இராணுவ குழுவினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதில் பலர் படுகாயமும் அடைந்திருந்தார்கள். அச்சம்பவத்துடன் தொடர்புபட்ட துணை இராணுவக்குழு உறுப்பினரான பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலே கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே பிள்ளையான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையிலே தற்போது அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தென் தமிழீழத்திலே சிறந்த அறிஞரும், சிறந்த ஜனநாயகவாதியும், மனித உரிமைவாதியாகவும் தமிழ் தேசிய பிரச்சனையிலே உறுதியுடன் உழைத்தவருமான ஜோசப்பரராஜசிங்கத்தை படுகொலை செய்தவரை அரசாங்கம் அபிவிருத்திக்குழு தலைவராக நியமித்ததன் மூலமாக அக்குற்றச்சாட்டிலிருந்து பிள்ளையானை தப்ப வைப்பதற்கு கோட்டபாய ராஜயபக்சவும், மகிந்த ராஜபக்சவும் கூட்டாக முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகமே எங்களுக்கு ஏற்படுகின்றது.
20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலைமையிலே ஒரு சர்வாதிகார போக்கிலே தாங்கள் தொடர்ந்து செல்லப்போகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டும் விதமாகவே இச்செயல் அமைந்திருக்கின்றது.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு கலந்து கொள்வதற்கான கடிதங்களை எங்களிற்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்க அதிபர்களை கோருகின்ற போது அவர்கள் எங்களிடம் ஜனாதிபதி செயலகத்துடன் பேசுமாறு தெரிவிக்கின்றனர்.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உரிமை இருக்கின்றது என்ற வகையில் வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் நடைபெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதஙற்கான அனுமதியினை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளேன்.
இவ்வாறு எனது கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு மூன்று வாராங்கள் கடந்த நிலையில் அதற்கான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. யாழ்ப்பாணத்திலே ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையிலே அரசினால் பிள்ளையானை இவ்வாறு நியமித்திருப்பதானது படுகொலையுடன் சம்மந்தப்பட்டவர்களை பாதுகாக்கின்ற முயற்சியாகத்தான் பார்க்கின்றோம்.
இச்செயற்பாடானது ஜனநாயத்தையும் மனித உரிமையையும் குழி தோண்டி புதைத்து படுகொலையாளிகள் எதிர்காலத்திலும் இவ்வாறான படுகொலையை செய்தாலும் அரசாங்கத்திற்கு துணையாக இருந்தால் தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்க கூடிய வகையிலேயே கோட்டா மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது. எங்களுடை உரிமை போராட்டத்தில் போராடினார்கள்.
விடுதலைப் போராட்டத்துடன் சம்மந்தப்பட்டார்கள் என்பதற்காகவும் பெருமளவானவர்கள் எந்தவித சம்மந்தமும் இல்லாமல் பொய்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது வடக்கு- கிழக்கு, தமிழர்களின் நிலைப்பாடாகவும், தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழர்களின் நிலைப்பாடக மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடாகவும் இருப்பதோடு அனைத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உலக தமிழர்களும் உள்ளனர்.
இதேவேளை ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி வழங்கிவிட்டும் விடுதலை செய்யப்படவில்லை. ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் 2015ம் ஆண்டு தெளிவாக கூறியிருக்கிறார்.
இலங்கையில் இருக்கின்ற பயங்கரவாத சட்டம் ஒரு கொடுரமான சட்டம் அது நீக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அது ஒரு பிழையான சட்டம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
அவ்வாறான ஒரு பிழையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகத்தமிழினமே கூறுகின்ற போது அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்து அவர்களுடைய எதிர்காலத்தை அழித்துக்கொண்டு, இருப்பதோடு தமிழ் சமூகத்தில் இருக்க கூடிய தமிழர்களுக்காக குரல் கொடுக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசப்பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டோடு சம்பந்தப்பட்டவரை இந்த அரசாங்கம் விடுவித்திருப்பது என்பது இந்த அரசாங்கத்தின் அநியாயத்திற்கு துணை போகின்றவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற செய்தியைதான் சொல்கின்றேன என்றார்.
0 comments: