அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது அம்பாறை மாவட்ட நிலைமை கருதி சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொழும்பு பிரதேசத்தில் இருந்து வந்தவர் என்பதுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 13 தினங்களுக்கு பின்னர் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவரது உறவினர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜி.சுகுணன் தெரிவித்தார்.
இதுவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொரானா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொத்துவில் – 7, கல்முனை -3, மருதமுனை -2, சாய்ந்தமருது – 1, அக்கரைப்பற்று -1, இறக்காமம்-6, திருக்கோவில் (தம்பிலுவில்)-01 என 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு, கல்முனை வடக்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கொரானா தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 561 குடும்பங்களைச் சேர்ந்த 1664 நபர்கள் வீடுகளில் இன்று வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 749 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 43 நபர்களும் பாலமுனை வைத்தியசாலையிலிருந்து 63 நபர்களும் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பிச்சென்றுள்ளனர். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை எதுவித கொரோனா மரணங்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
0 comments: