Home » » மட்டக்களப்பு நகரில் தங்க நகைகள் திருடிய சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு நகரில் தங்க நகைகள் திருடிய சந்தேக நபர் கைது

 


கடந்த 19 ஆம் திகதி மட்டக்களப்பு நகர் புளியந்தீவு பகுதி வீடொன்றில் 66 1ஃ2 பவுன் நகைகளை திருடிய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுழூர்முனையை சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸ் பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் வேளையில் மட்டக்களப்பு நகர் புளியந்தீவு புனித அந்தோனியார் வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாவது அறையில் கட்டில் பகுதியில் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 66 அரை பவுன் தங்க நகையினை அடையாளம் காண முடியாத நபர் ஒருவரினால் வீட்டின் ஜன்னல் பகுதி ஊடாக தடியினை பயன்படுத்தி திருடிச் சென்றுள்ளதாக

வீட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ள குறித்த நபரை அடையாளம் காண முடியாத நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை கோரியிருந்தனர்.

இதற்கமைய மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மென்டிஸ் வழிகாட்டலின் கீழ் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்,

பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுழூர்முனை வயல் வீதி பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் திருடப்பட்ட நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸ் பரிசோதகர் பண்டார தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களான, பி.எஸ் போப்பிட்டிய, பி.எஸ் விஜேரட்ன, பி.எஸ் வன்னிநாயக, பி.சி விஜேவீர, பி.சி ஹேரத், பி.சி கமலராஜ், பி.சி ராஜபக்ச, பி.சி லசிந்து, பி.சி டி.பிரேமரட்ன ஆகிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளத்துடன், கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பான நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |