Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவர் சடலமாக மீட்பு


 புத்தளம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் வீதியோரத்தில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

புத்தளம், நிந்தனியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. குமாரதாச, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்ரா பெனாண்டோ, மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் என். சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கெட்டிப்பொலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணி புரிந்து வந்த இவர், அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு , நேற்று முன்தினம் (04) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து நேற்று (05) வீட்டிற்கு வருகை தந்ததாக, புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர். 

இதேவேளை, உயிரிழந்த குறித்த நபர், கெட்டிப்பொலவில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ், கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, புத்தளம் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் என். சுரேஷ் தெரிவித்தார்.

உயிரிழந்த குறித்த நபரின் சடலம் சுகாதார அறிவுறுத்தலின் பிரகாரம் பூரண பாதுகாப்பில் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, புத்தளம் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் என். சுரேஷ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments