கொழும்பில் கொரோனா தாக்கத்தின் வேகம் அதிகரித்துள்ளதால் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான சன நெரிசல் காணப்படுவதால் மாடி வீடுகளில் வசிப்போர் தமது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் ஏனைய வீடுகளுக்கு செல்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் வயதானவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகளாக உள்ளவர்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சில மரணங்கள் வீட்டிலேயே நிகழ்ந்துள்ளதை சுகாதார அமைச்சு அவதானித்து வருகிறது.
பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் அதற்கிடையில் வைரஸ் தொற்று நோயாளர்கள் உள்ளதைக் காணமுடிகிறது.
அந்தவகையில் வீடுகளுக்கு வந்து செல்வோர் மூலம் அது தொற்றலாம் என்பதால் எவ்வாறு தொற்று ஏற்படுகின்றது என்பதை நாம் இனங்காண்பது அவசியமாக உள்ளது.
அதனால் குறிப்பாக சன நெருக்கடியான பகுதிகளில் மாடி வீடுகளில் குடியிருப்போர் ஏனைய வீடுகளுக்குச் செல்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உள்ளூரில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வயதானவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவதும் மரணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் அவ்வாறானவர்கள் தமக்கு தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை தவிர்த்துக் கொள்வது முக்கியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: