Home » » அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தொடரும் இழுபறி; ட்ரம்ப்பிற்கு சாதகமான அறிவிப்பை வெளியிட்ட நீதிமன்று!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தொடரும் இழுபறி; ட்ரம்ப்பிற்கு சாதகமான அறிவிப்பை வெளியிட்ட நீதிமன்று!

 


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள போதும், இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடிக்கும் பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிச்சிகன், ஜார்ஜியா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக ட்ரம்ப் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அதுதொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பிடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளர். தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

ஜோ பிடன் வெற்றியை நெருங்கியிருக்கிறார். ஆனால் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடிக்கிறது.

இழுபறி நீடிக்கும் அரிசோனா, நெவடா மாநிலங்களில் பிடன் முன்னிலையில் இருக்கிறார். பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இந்த மாநிலங்களின் முடிவைப் பொறுத்து தேர்தலின் இறுதி முடிவுகள் அமையும்.

குறிப்பாக, 20 தேர்வுக்குழு வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று தெரிய வந்துவிடும் என்று மாநில செயலாளர் கேத்தி புக்வார் தெரிவித்துள்ளர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |