Home » » உடனடியாக நிறுத்தவும்! அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது “சிங்களே”அமைப்பு - கடுமையாக எச்சரிக்கும் தேரர்

உடனடியாக நிறுத்தவும்! அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது “சிங்களே”அமைப்பு - கடுமையாக எச்சரிக்கும் தேரர்

 


தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை எச்சரித்துள்ளார் ‘சிங்களே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

“கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட அரசாங்கம் மிகவும் முக்கியமானதொரு விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிரான பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து நாமும் குரலெழுப்பி வந்தோம். இதற்கு எதிராகப் பல அமைப்புக்கள் அங்கு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டன.

எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணம் முழுவதற்கும் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு தருணத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

நாட்டின் சுயாதீனத்துவத்தையும் இறையாண்மையையும் பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயலாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். எனவே அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்கின்றது. இந்த அரசாங்கத்தை நாட்டு மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும்வரையில் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

மக்கள் தம்மீது கொண்டிருக்கும் இந்த அபார நம்பிக்கை தொடர்பில் ஆட்சியாளர்கள் நன்கு அறிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைத் தவறான முறையில் பயன்படுத்தியே ஆட்சியாளர்கள் இத்தகைய காரியங்களைச் செய்கின்றார்கள்.

அதேபோன்று ஸ்பார்க் எயார் என்ற நிறுவனத்துக்கு மத்தள விமானநிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கையளிக்கப்படவிருக்கிறது என்பது தொடர்பாகவும் நாம் அறிவோம்.

இவ்வாறு தேசிய பாதுகாப்பு அடிப்படையிலும் உபாய மார்க்க ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |