விமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மநாாட்டில் பாடசாலைகளின் நிலைமை தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர் பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் பெற்றோர் தரப்பில் பெரும் கோரிக்கை இருந்ததாகவும் கூறினார்.
மாணவர்களின் பாதுகாப்பை போன்று மாணவர்களின் வாழ்க்கையின் முக்கிய காரணியாகக் கருதி அதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்பற்ற விதத்தில் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 23ஆம் திகதி தான் பாடசாலைகளை ஆரம்பித்தோம். இதுவரை மூன்று நாட்கள் கடந்துள்ளன. 23ஆம் திகதி 33 சதவீத மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தனர். 24ஆம் திகதி இத்தொகை மேலும் அதிகரித்தது இது 45 சதவீதமாக அமைந்திருந்தது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்றையதினம் அதாவது மூன்றாம் நாள் பாடசாலை மாணவர்களின் வரவு 51 சதவீதமாக அமைந்து.
ஆசிரியர்களின் வருகையும் 82 சதவீதமாக அமைந்திருந்தது. ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சென்று தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்மூலம் என்ன தெரிகின்றது என்றால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு நாட்டில் தொடர்ச்சியாக வரவேற்பு இருந்து வருகிறது என்பதாகும் பாடசாலைகளை மூடுவது என்பது மாணவர்களின் வாழ்க்கையினை செயலிழக்க செய்வதாகும்.
பாடசாலைகளை ஆரம்பிப்பது என்பது பெரும் சவால் மிக்க ஒன்றாக இருந்தபோதிலும் பெற்றோர்கள் இந்த சவால்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் ஆர்வமாக உள்ளனர். பெற்றோர் இதனை உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளனர். பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைத்திருக்க வேண்டாம் என்றும் முடிந்தவரை அவற்றைத் திறந்து மாணவர்களின் கல்விக்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நடைமுறையில் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் இரண்டு விடயங்கள் முக்கியமானதாகும். மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவது. மற்றது மாணவர்களின் எதிர்காலம். இந்த இரண்டு விடயங்களையும் தீவிரமாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சில இடங்களில் பாடசாலைகளை திறக்க முடியாது என்பது தெளிவாகத் தெரியும். அதாவது மேல் மாகாணத்தில் கொழும்பு களுத்துறை கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகளை உடனடியாக திறப்பது என்பது சிரமமான விடயமாகும் இதேபோன்று பொலிசாரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை திறப்பது இல்லை என்றும் நாம் தீர்மானித்தோம் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு நாம்; தீர்மானித்தோம். அதாவது தரம் 6; தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்பு வகுப்புகளை ஆரம்பிக்க நாம் தீர்மானித்தோம்; இத்தீர்மானம் பொறுப்பற்ற வகையில் மேற்கொள்ளப்படவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் பலவற்றை நாம் வழங்கினோம். தொற்று நீக்கத்திற்கான கிருமி நாசினி போன்ற பல பொருட்களை வழங்கினோம்.இருந்தும் சில பாடசாலைகளில் குறைபாடுகள் இருந்தன இதற்காக நிதி ஒதுக்கினோம்..
மத்திய மாகாணத்திற்காக 63 இலட்ச ரூபாவும் தென் மாகாணத்திற்கு 49 இலட்ச ரூபாவையும் ஒதுக்கீடு செய்தோம் வட மாகாணத்திற்கு 36 லட்சம் ரூபாவையும் கிழக்கு மாகாணத்திற்கு 45 லட்ச ரூபாவையும் ஒதுக்கீடு செய்தோம். இவ்வாறு அனைத்து மாகாணங்களுக்காக 3கோடி 60 இலட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மாகாண பணிப்பாளர்களுக்கு இந்த பணத்தை செலவிடுவதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தோம்.
நேற்றைய தினம் கண்டியில் 45 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது கிளிநொச்சியில் சில காலத்திற்கு பாடசாலைகளை திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது அம்பலாங்கொடையில் இரண்டு பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது.
நாட்டில் 10 ஆயிரத்து 165 பாடசாலைகள் இருக்கின்றன இவற்றுள் ஐயாயிரத்து 500 பாடசாலைகளை 23 ஆம்திகதி ஆரம்பித்தோம். நடைமுறைப்படுத்தும் பொழுது குறைபாடுகள் இருக்கக்கூடும் பிரச்சினை ஏற்படும் உடன் அவற்றுக்கு பொருத்தமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். பெற்றோர் ஆசிரியர்கள் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வமாகவுள்ளனர்.
அரசாங்கம் என்ற ரீதியில் எமது கொள்கை இதுவாகும். இந்த விடயம் எமது நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் நிலவுகின்ற ஒரு பிரச்சினையாகும். சர்வதேச ரீதியிலான ஒரு சவாலாக இந்த விடயம் அமைந்துள்ளது என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments: