Home » » தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரா?- பாராளுமன்ற உறுப்பினர் - இரா.சாணக்கியன்!!

தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்வதை இலக்காகக் கொண்டே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரா?- பாராளுமன்ற உறுப்பினர் - இரா.சாணக்கியன்!!

 


பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்யும் முயற்சியை ஒரு சவாலாக எடுத்து தற்போதைய ஜனாதிபதி செயற்படுகின்றாரோ என்று சந்திதேகிக்கத் தோணுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


இன்றைய தினம் (10) இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபையில் வரவுசெலவுத் திட்ட சபை அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனிவரும் காலங்கள் உண்மையில் மிகவும் சவாலான ஒரு காலப்பகுதி. தமிழர்கள், தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் பல வடிவங்களைக் கொண்டது. இன்றைய எமது போராட்டமானது நில அபகரிப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கின்றோம். 

தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து காணிகளிலும் அபகரிப்புகள் இன்று மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது இனம் ஆயுத ரீதியில், அரசியல் ரீதியில் போராடிய போது சாதிக்க முடியாத சிங்கள அரசாங்கம் இன்று குடியேற்றத் திட்டங்களுடாக சாதிக்க முனைகின்றது. 

இந்தக் காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். இன்று தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பெரும்பான்மையினத்தவரைத் திட்டமிட்டு குடியேற்றும் செயற்திட்டம் மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றது. 

குறிப்பாக மடடக்களப்பு மாவட்டத்தில் மாதவணை, மயிலத்தமடு பிரதேசம் சோளன் பயிர்ச்செய்கை என்று கொடுக்கப்பட்டு இன்று நெல் விதைக்கும் செயற்திட்டம் இடம்பெற்று வருவதாகவும் நாங்கள் அறிகின்றோம். இதேபோல் திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களிலும் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன.

அண்மையில் வவுனியாவில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த நாட்டில் எந்தவொரு பகுதியிலும் சிங்களவர்கள் குடியேற முடியும் என்று, ஒரு சிங்கள நபர் இங்கு காணிகளை விலைக்கு வாங்கி குடியேறுவதென்றால் அதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம் ஆனால் அரசாங்கத்தினால் ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான நபர்களைக் கொண்டுவந்து குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இது ஒரு இனப்பரம்பலை அழிக்கும் செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். இன்று ஆளுங்கட்சியுடன் இணைந்து கொங்கிறீற்று பாதைகளுக்குப் பின்னால் திரியும் நபர்களுக்கு இது விளங்குவதில்லை என்பதே எமக்கு மனவேதனையான விடயமாகும்.

கொங்கிறீற்று வீதிகள் என்பது நிதி இருந்தால் செய்து விடலாம். ஆனால் எமக்கான காணி இருந்தால் தான் நாம் தமிழர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக இங்கு எமது நிலப்பரப்பில் வாழ முடியும். நேற்றுகூட மயிலத்தமடு பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் எமது பண்ணையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள். 

இத்தகு விடயங்களில் அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் ஏதேனும் அரச காணிகளைத் துப்பரவு செய்து பயிர்ச்செய்கைக்கு முயற்சிகளை மேற்கொண்டால் இந்த அரச அதிகாரிகள் எனக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் மயிலத்தமடு பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறுவது தெரிந்தும் கூட அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். ஒருவேளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருக்கு நடந்த விடயம் தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றார்களோ தெரியவில்லை. ஒருவேளை அரச அதிகாரிகளை அச்சுறுத்தியும் வைத்திருக்கலாம்.

இது மிகவும் அவதானமான ஒரு காலப்பகுதி. பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ஷ போன்ற இந்த நாட்டில் சில முக்கிய குழப்பங்களை உருவாக்கிய அரசியற் தலைவர்களினால் சாதிக்க முடியாத தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் வடக்கு கிழக்கு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழர் தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்யும் முயற்சியை ஒரு சவாலாக எடுத்து இந்த ஐந்து வருட காலத்தில் இதனை செயற்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்று எங்கள் மனதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.

அந்தவகையில் இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழ் பேசும் மக்களாகிய நாம் இனியும் பிரிந்து நிற்காமல் செயற்பட வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் அனைத்து தமிழ்பேசும் உறுப்பினர்களும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நடக்கும் இந்த அநீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்காமல் அரசாங்கத்திற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும். நீங்கள் உண்மையிலேயே தமிழர்களாக இருந்தால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தால், தமிழ்த் தாய்க்குப் பிறந்தவர்களாக இருந்தால் உடனடியாக தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படும் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |