(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் எண்ணக்கருவில் உதயமான 5000 குளங்களை புனரமைக்கும் செயல்திட்டத்தினை நாடுபூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய அபிவிருத்திக் குழுவின் விசேட கூட்டமும் இன்று(11) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக அபிவிருத்திசெய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், தூர்ந்து போன குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்திசெய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 17 கமநல சேவைகள் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு கமநல சேவைகள் நிலைய பிரிவுகளிலும் மூன்று முதல் ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வேலைத்திட்டமானது ஒப்பந்த காரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக விவசாய அமைப்பினர், பொது மக்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், தொண்டர்கள் மூலமாகவே இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் மத்திய மாகாண அரசாங்கத்தின் கீழ் வருகின்ற 87 குளங்கள் மட்டக்களப்பில் அவிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இக்கூட்டத்திற்கு மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என் நாகரேத்தினம், மாகாண நீர்பாசன பிரதிப்பணிப்பாளர் வே.ராஜகோபாலசிங்கம், விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராசா, கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் கே.ஜெகநாத், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments