Home » » மேலும் 4 கொரோனா சிகிச்சை நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் !!

மேலும் 4 கொரோனா சிகிச்சை நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் !!

 


கொரோனா தொற்றாளர்களை சிகிச்சையளிப்பதற்கென கிழக்கு மாகாணத்தில் மேலும் நான்கு வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 119 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.


பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய கொவிட் தொற்றாளர்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் இந்நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் வகையில் இவ்வாறு புதிதாக நான்கு கொரோனா சிகிச்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு ஏற்கனவே ஐந்து வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றோடு புதிதாக மேலும் நான்கு வைத்தியசாலைகள் கொவிட்-19 சிகிச்சைக்காக தயார் படுத்தப்பட்டதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் ஒன்பது வைத்தியசாலைகள் இச்சிகிச்சைக்காக இயங்கவுள்ளன.

இதற்கமைவாக, திருகோணமலை மாட்டத்தில் குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலை மற்றும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகார எல்லைக்குட்பட்ட தமண பிரதேச வைத்தியசாலை ஆகியன புதிதாக கொரோனா சிகிச்சை நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்கள் மூலம் 450 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட 5400 பேருக்கு இதுவரை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் தற்போது 1904 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன் இதன்போது தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்கள் மூலம் இதுவரை 731 நோயாளர்களுக்கு வெற்றிகரமான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போது 135 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் எனவும் நேற்று கிழக்கு மாகாணத்தில் புதிதாக இருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அம்பாறை தமண மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |