Home » » கிழக்கின் கொரோனா நிலவரம் !

கிழக்கின் கொரோனா நிலவரம் !

 


(காரைதீவு  நிருபர் சகா) 

நாட்டில் ஏற்பட்ட கொரோனா   தாக்கம் கடந்த மார்ச் 13ஆம் திகதியுடன் ஆரம்பித்தது. அலைஅலையாக தாக்கத் தொடங்கியுள்ள கொரோனாவை அரசாங்கம் மிகச்சாதுரியமாக கட்டம் கட்டமாக கட்டுப்படுத்திவருகிறது. உயர்தரப்பரீட்சை நிறைவுற்றதும் துரித கட்டுப்பாடுகளை எதிர்நோக்கவேண்டிவரும்.

இறுதியாக அக்.3 ஆம் திகதி தொடங்கிய மூன்றாவது அலையின் தாக்கம் மேற்கிற்கு அப்பால் கிழக்கையும் முதற் தடவையாக கிலி கொள்ள வைத்திருக்கிறது. முதலாவது அலையில் மட்டு நகரைச்சேர்ந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகி பின்பு குணமாகி அவர் லண்டன் சென்றுவிட்டார் என்பது தெரிந்தவிடயமே.

ஆனால் இந்த 3வது அலை கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களையும் வெகுவாக பாதிக்கத்தொடங்கியுள்ளது அதுவரை நிம்மதியாக இருந்துவந்த கிழக்கு மக்கள் பயபீதியுடன் நாட்களை கடத்துவதைக் காணமுடிகிறது. எனினும் பலர் இன்னமும் பொடுபோக்குத்தனமாக நடமாடுவதையும் இவ்வண் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் வந்தாலே தெரியும் என்பார்கள். எனவே கொரோனா தனது படலையை தட்டும்வரை பார்த்திருப்பதை விட வருமுன் காக்க சுகாதாரத்துறையினருடன் ஒத்துழைக்கவேண்டியதவசியமாகும். 

இன்றைய கிழக்கின் கொரோனா நிலவரம்!

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது. கிழக்கில் இதுவரை 77பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மூலமாக 04பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 73பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.

கிழக்கு மாகாண கொவிட் தகவல் மையம் இத்தகவலை தெரிவிக்கிறது.

கிழக்கில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 35 இனங்காணப்பட்டிருந்தன. அடுத்தபடியாக மூதூரில் 9பேரும் பொத்துவிலில் 7 பேரும் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இறுதியாக மூதூரில் மூவரும் கல்முனைப்பிராந்தியத்தில் நால்வரும் திருமலையில் ஒருவரும் புதிதாக இனங்காணப்பட்டிருந்தனர்.

அம்பாறை மகாஓயா தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப்பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும் மினுவாங்கொட கொத்தணிமூலம் தொற்றுக்குள்ளானவர்கள். ஏனைய 73பேரும் பேலியகொட மீன்சந்தைகொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.

கல்முனையில் மேலும் 4 பேர் கொரோணா தொற்றாளர்களாக நேற்றுமுன்தினம் அடையாளப் படுத்தப் பட்டார்கள். மருதமுனையில் இருந்து ஒருவரும் அக்கரைப்பற்றில் இருந்து ஒருவரும் இறக்காமம் பிரதேசத்தில் இருந்து இருவருமாக மொத்தமாக 4 பேர் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கல்முனைப் பிராந்தியத்தில் மொத்தமாக 17 பேர் கொரோணா நோயாளிகளாக சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்கள்  . 

 
மேலும்  (3.11.2020)  கிழக்கு கொவிட் தகவல்மைய தரவுகளின்படி.

கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 425 கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (03.11.2020) வரை 570 பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 225பேர் அனுமதிக்கப்பட்டு 131பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 92பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இருவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 103 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 69பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 81 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 3462பேரில் 1316பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை கிழக்கிலுள்ள 12 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3052பேர் அனுமதிக்கப்பட்டு 3764பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 108பேருக்குச் சாதகமான அதாவது தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. 125பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். எனவே தற்போது மேற்படி 12 நிலையங்களிலும் 2819 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்  தொற்றாளர்கள் அதிகரித்துவருகின்ற இன்றையநிலையில் மேலும் கொரோன சகிச்சை வைத்தியசாலைகள் தொடக்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மறுபுறம் பொதுமக்கள் இன்னும் சரியான சுய பாதுகாப்பிலீடுபட்டதாகத் தெரியவில்லையென சுகாதாரத்துறை கவலையடைகின்றது.

கொழும்பலிருந்து வந்தவர்கள் யாரிடமும் சொல்லாமல்  சுற்றித்திரிவதாக மருத்துவர்கள்  சுட்டிக்காட்டத்தவறவில்லை. எனவே மக்கள் தாமாக உணர்ந்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிடின் கொரோனா மேலும் தனது கோரமுகத்தை சீற்றத்துடன் வெளிக்காட்டலாம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |