Home » » மேய்ச்சல் தரை விவகாரம்- மட்டக்களப்பு அரச அதிபர் மாற்றத்தின் பின்னணியில் கிழக்கு ஆளுநர்?

மேய்ச்சல் தரை விவகாரம்- மட்டக்களப்பு அரச அதிபர் மாற்றத்தின் பின்னணியில் கிழக்கு ஆளுநர்?

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் பதவிக்கு புதியவர் ஒருவர் திடீரென நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார்.

இன்று பிற்பகல் அதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

அரச அதிபராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக , மாகாண சபைகள் ,உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிலர் கிழக்கு மாகாண ஆளுநரின் உதவியுடன் அபகரித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்ததன் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு புதிய அரசாங்க அதிபராக கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்படும் அரசாங்க அதிபர்கள் அரசியல் காரணங்களுக்காக மாற்றப்படுவதும் அதனை மாவட்ட அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்ப்பதும் மாவட்ட அரச நிர்வாகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளன.

மாறி மாறி வரும் அரசாங்கங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடயத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது பக்கச்சார்பாக அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு ஒரு அதிகார வர்க்கத்தை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்க அதிபர் பதவிகளை பாவிப்பதற்கு முற்படுகின்றனர் எனவும் விமர்சனங்கள் எழுகின்றன.

இது கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி என தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் தொடர்கிறது என்பதே உண்மை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊழல் அதிகாரிகள் 15 வருடங்களுக்கு மேல் அரசியல்வாதிகளின் ஆதரவோடு தொடர்ந்து இதே மாவட்டத்தில் பணியாற்றும் போது புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டு ஒருவருடங்கள் கூட ஆகாத நிலையில் திடீரென அரசாங்க அதிபரை பணி இடைநீக்கம் செய்ய காரணம் என்ன? அவ்வாறு அவசரமாக பணி இடைநீக்கம் யாருக்காக செய்யப்பட்டது என்ற கேள்விகள் எழுகிறது. இதன் பின்னால் உள்ள அரசியல் காரணிகள் என்ன? என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி இவ்வாறான இடமாற்றங்களை அனுமதிக்க முடியாது அனுமதிக்கவும் கூடாது.

சட்டவிரோத சிங்கள குடியேற்றம் ஒன்றை தடுத்ததற்காகவும் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கு மண் அனுமதி பத்திரம் வழங்க மறுத்ததற்காகவும் ஒரு அரசாங்க அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் இந்த போக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நல்லதல்ல .

மக்களுக்காக பணியாற்றுவதற்கே ஒரு அரசாங்க அதிபர் தேவை அரசியல் வாதிகளுக்கும் மண் மாபியாக்களுக்கும், காணி மாபியாக்களுக்கும் பணியாற்றுவதற்காக இந்த மாவட்டத்தில் பல அரசாங்க அதிபர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனை செய்யாத அரசாங்க அதிபர்கள் பழிவாங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடப்பதும் அது தான். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிலும் இவ்வாறான பழிவாங்கல்கள் தொடர்வது அவரது நிர்வாகத்திற்கும், ஆளுமைக்கும் இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.

எந்த அரச உயர் அதிகாரிகளின் நியமனமும், இடமாற்றமும் அரசாங்க நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப நடைபெறவேண்டுமே தவிர அரசியல் தலையீடுகள் காரணமாக ஒரு அரச உயர் அதிகாரி மாற்றம் செய்யப்படுவதை யாரும் இனிவரும் காலங்களில் அனுமதிக்க வேண்டாம்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |