இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5538 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 63 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 13 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 48 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொழும்பு 12 – ஆமர்வீதி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, கொழும்பு 12 – ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பேருந்து நடத்துனருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு – பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்து நடத்துனருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 23 பேருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2075 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 8 பேர் குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3403 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், 2122 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், 306 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் இதுவரை 3 இலட்சத்து 83 ஆயிரத்து 961 PCR பரிசோதனைகள் முன்னடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 Comments