Advertisement

Responsive Advertisement

செய்தி அறிந்து வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடிய ரிஷாட்! சீ.ஐ.டி கண்டுபிடிப்பு

 


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என்பதை தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தாரென குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ரிஷாட் கடந்த 13ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்புக்கு வந்துள்ளார். பயணத்தின் போது தனது வாகனத்தில் செய்தியை செவிமடுத்துக் கொண்டிருந்தாரென குற்றப்புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்ட மாஅதிபர் பொலிஸாருக்கு உடனடியாக பதியுதீனை கைது செய்து காவலில் வைக்குமாறு அறிவித்ததாக அந்தச் செய்தி அமைந்திருந்தது.

உடனே சாரதியிடம் புத்தளம் – சிலாபம் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியதுடன் உடன் அதிலிருந்து வெளியேறி பிறிதொரு வாகனத்தில் புத்தளத்துக்கு தப்பினார்.

இது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த நேரத்தில் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு வாகனத்திலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரான பதியுதீன் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பின்பு, முன்னாள் அமைச்சரின் அதிசொகுசு ஜீப்பை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பறிமுதல் செய்ததுடன் அதிலிருந்த இரு சாரதிகளையும் கைது செய்தனர். வாகனத்தின் உள்ளே கண்டெடுக்கப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

தற்போது முன்னாள் அமைச்சர் பதியுதீனைத் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு கொழும்பில் பதியுதீனின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments