Home » » மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதிக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதிக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி!

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதிக்கும், அவரது 10 மாத கைக்குழந்தைக்கும் கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவர் தனது கைக்குழந்தையையும் குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறையில் கம்பஹாவிற்குச் சென்று வருவதுண்டு என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கமைய குறித்த தாதி உத்தியோகத்தர் கடந்த 04ஆம் திகதி விடுமுறை பெற்றுக் கொண்டு தமது சொந்த ஊரான கம்பஹாவிற்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 09ஆம் திகதி அவரும் அவரது கைக்குழந்தையும் உடல் நலக் குறைவு காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தாய்க்கும் சேய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மட்டக்களப்பில் குறித்த தாதி கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு கடமையாற்றிய தாதியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட தேவையில்லை எனவும் முகக்கவசம் அணியுமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும், பொது மக்கள் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |