மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனாவெளி பகுதியில் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த இரு கசிப்பு உற்பத்தி நிலையங்களும் முற்றுகையிடப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக சட்ட விரோத போதைப்பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனாவெளி பகுதியில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இங்கிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கான நவீன உபகரணங்கள் மற்றும் கசிப்பு, கோடா என்பன மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது சட்ட விரோத போதைப்பொருட்களை வைத்திருந்த 08 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments