Home » » வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 


இறந்தவர்களை,  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. 

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை,  வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின்  அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக்  கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம். 

 எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

குற்றவியல் நடைமுறை கோவையின்,  பொது  தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை,  ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் -

இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக  அளவில் ஒரு கலாசார உரிமையாகவும்,  அரசியல் உரிமையாகவும் உள்ளது.

இந்த நிலையில் - போலீசார் ஊடாக   நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு   தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும்   ஏற்றுகொள்ள முடியாது.

இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை  அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

உறுப்புரை 10 ன்  "மனசாட்சியின்  படி செயற்படுதல்",  உறுப்புரை 14 "பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது" என்பவற்றை  இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். 

யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும்,  இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை  போலீசாரை கொண்டு,  நீதிமன்றங்களின் மூலம்  இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது,  இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற - பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பின்னரும்  இறந்தவர்களையும்,  அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய  பூரண  முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |