இலங்கையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை மையப்படுத்தி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கமையவே, நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போது நாட்டில் சில பாடசாலைகள் பெயரளவில் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக காணப்படுவதாகவும், அவற்றில் போதுமான வசதிகள் காணப்படவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பாடசாலைகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாடசாலைகளின் அபிவிருத்தியை மையப்படுத்தி மாவட்ட கல்வி குழுக்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், வலயக் கல்விக் காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியாலயங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது என்பவற்றைத் தவிர்த்து, ஏனைய பாடசாலை அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் விடயங்களில் அரசியல்வாதிகள் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை மீள்நிரப்புவதற்கு பதில் அதிபர்களை நியமிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலைகளில் திறமையான மற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments