Home » » யுவதி கொலை; கைதான பெண்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யுவதி கொலை; கைதான பெண்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மதியம் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த யுவதியுடன் மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி உட்பட இரண்டு பெண்கள் அடையாளம் காணப்பட்டு குறித்த சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் நேற்று(23) மாலை 7 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட இரு பெண்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த கொலைக்கும், குறித்த இரு பெண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வெளி நாட்டுக்கு அனுப்புவதற்காக குறித்த பெண்ணின் தாய் மாமனிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு குறித்த இரு பெண்களும் சென்றதாகவும் குறித்த கொலைக்கும் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார் .

எனினும் பாதிக்கப்பட்ட யுவதி சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சர்மிலன் டயஸ், குறித்த கொலை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவம் எனவும், இறந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இக் கொலை இடம் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், அவ் இரு பெண்களிடமும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எனவே இக் கொலையின் பிரதான சந்தேக நபரான அவ் பெண்ணின் தாய் மாமனை கைது செய்வதற்கான அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்குவதுடன் குறித்த இரு பெண்களையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் மன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாத பிரதிவாதங்களின் பின்னர் பிரதான சந்தேக நபரான செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் தாய் மாமனை கைது செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், குறித்த இரு பெண்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |