அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைதப் பெற்றுத்தர தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உண்மையில் இந்த நாடாளுமன்றத்துக்கு நாம் வருவதற்கான நோக்கமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதற்காகவே.
எனவே, 10 உறுப்பினர்களாகவோ ஐந்து உறுப்பினர்களாகவோ இருந்தாலும் சரி எமக்கு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்.
அந்தவகையில், சிலநேரம் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமே இருக்காது. மாகாண சபையின் ஊடாக எங்களது வேலைத் திட்டங்களை செய்யக்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் அரசாங்கத்துக்கு ஆணித்தரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியாயின், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments