Home » » கூட்டமைப்பின் பாரிய பின்னடைவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?

கூட்டமைப்பின் பாரிய பின்னடைவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?

 

போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என கடந்த ஒரு தசாப்த காலமாக உரிமைகோரிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. 20 ஆசனங்களை இலக்கு வைத்துச் செயற்பட்ட அவர்களால் 10 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கின்றது.


கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவரும், செயலாளர் நாயகமும் படுதோல்வியடைந்திருக்கின்றார்கள். அது ஒரு சிறிய தோல்வியல்ல. பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கின்றார்கள். மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். இந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்ன? அடுத்ததாக அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டில் 22 ஆசனங்களைக் கைப்பற்றி மிகவும் பலமான – அசைக்கமுடியாத ஒரு கட்சியாக இருந்தது. தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் நாமே என மார்தட்டக்கூடிய நிலையில் இருந்தது. 2015 இல் கூட 16 ஆசனங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைமையை கூட்டமைப்பால் பெறமுடிந்தது. இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு கூட்டமைப்பு வந்தமைக்குப் பொறுப்பேற்கப்போவது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 2010 இல் வெளியேறியது. தனித்துச் சென்ற அவர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. கூட்டமைப்பு பலமான ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்பதை விரும்பிய மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களித்தார்கள்.

2015 க்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளால் ஈ.பி.ஆர்.எல்.எப். வெளியேறியது. பின்னர் வடமாகாண முதலமைச்சராக கூட்டமைப்பின் தலைமையால் கொண்டுவரப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரன் அதிலிருந்து வெளியேறி தனியான ஒரு கட்சியை ஆரம்பித்தார். இறுதியாக ரெலோவிலிருந்தும் ஒரு பிரிவினர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்கள்.

இவர்கள் அனைவரும் தமிழரசுத் தலைமையின் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வத்தார்கள். அதனைவிட கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கூட்டமைப்புக்கென ஒருங்கிணைப்புக்குழு ஒன்றும், பாராளுமன்றக் குழு ஒன்றும் இருக்கின்ற போதிலும் பெரும்பாலான முடிவுகள் சம்பந்தனாலும், சுமந்திரனாலும்தான் எடுக்கப்பட்டன. முடிவெடுப்பதில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கூட அதிகளவு செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை.

பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு வந்தன. பங்காளிக் கட்சித் தலைவர்கள் என்ற என்ற முறையில் இருக்க வேண்டிய செல்வாக்கு அவர்களுக்கு கூட்டமைப்பில் இருக்கவில்லை. “போக்கிடம்” இல்லாமையால் அந்த இரண்டு கட்சித் தலைவர்களும் சகிப்புத் தன்மையுடன் “வீட்டுக்குள்” முடக்கிக்கிடந்தார்கள் என்பது இரகசியமல்ல. அவ்வப்போது தமிழரசுத் தலைமைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு தமது ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்திக்கொண்டார்களே தவிர வேறு எதனையும் செய்ய அவர்களால் முடியவில்லை.

கூட்டமைப்பில் இணைந்திருந்த பங்காளிக் கட்சிகள் மட்டும் தமிழரசுத் தலைமை மீதான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்திய தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினர் கூட இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். பேச்சாளர் பொறுப்பிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சிக்குள்ளிலிருந்தே வந்தது. தமிழ்த் தேசிய நீக்க அரசியலைச் செய்கின்றார், தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றார் என்பன அவர் மீதான பிரதான குற்றச்சாட்டுக்கள். கூட்டமைப்பு சந்தித்த இந்த பாரிய பின்னடைவுக்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

இதனைவிட, “நல்லாட்சி”க்காலத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், அதனைப் பயன்படுத்தி அரசுக்குப் போதிய அழுத்தங்களைக் கொடுக்காமையும் கூட்டமைப்புத் தலைமை மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது. ரணில் விக்கிரமசிங்க மீது கூட்டமைப்புத் தலைமை கொண்டிருந்த அதீத நம்பிக்கை இதற்குக் காரணமா? அல்லது ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்ற அவர்களுடைய “மென்மையான” மனப்போக்கு காரணமா?

“நல்லாட்சி” பதவியேற்றவுடனேயே அதன் மீது அதீத நம்பிக்கையை சம்பந்தன் வைத்திருந்தார். “2016 இல் தீர்வு கிட்டிவிடும்” என அவர் உறுதியாக நம்பினார். அதனைப் பகிரங்கமாகவும் அறிவித்தார். இலங்கை அரசியலில் இந்தளவு நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ள சம்பந்தன் எப்படி அரசின் மீது இப்படி நம்பிக்கை வைத்தார்?

தீர்வு கிடைக்காது என்பது தெளிவாக வெளிப்படையாகத் தெரிந்த பின்னர் கூட அரசுடனான உறவுகளில் மென்போக்கைத்தான் கூட்டமைப்பு கையாண்டது. இந்த மென்போக்கு களத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் ‘கம்பரெலியா’ போன்ற பரிசுப் பொருட்களுடன் அவர்கள் ஊர் வந்தார்கள். அதனை வைத்து மக்களை சமாதானப்படுத்த முயன்றார்கள். அதனை மக்கள் ஏற்கவில்லை என்பது இப்போது வெளிப்படையாகியிருக்கின்றது.

“தமிழரசுக் கட்சித் தலைமைதான் இந்தப் பின்னடைவுக்குக் காரணம்” என சுமந்திரன் கூட இப்போது குற்றஞ்சாட்டுகின்றார். வடமராட்சியிலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். தமிழரசுக் கட்சித் தலைமையை வழிநடத்தியவரே அவர்தான் எனக் கூறப்படும் போது, இவ்வாறான குற்றச்சாட்டை எப்படிப் புரிந்துகொள்வது என்பது தேரியவில்லை.

ஆக, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தமிழ் மக்களுடைய வாக்குகள் சிதறிப்போனமைக்கும், தேசியக் கட்சிகள் அவ்வாறு சிதறிய வாக்குகளில் பெருமளவை அறுவடை செய்திருப்பதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தமிழரசுத் தலைமைதான். இது தமிழ்த் தரப்பினை வெகுவாகப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. தேசியக் கட்சிகளுக்கு பெருகும் ஆதரவு ஆபத்தான ஒரு அறிகுறி. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினையே இல்லை என்ற நிலையை இது ஏற்படுத்தும். சர்வதேச அரங்கில் தமிழர்களின் கோரிக்கைகளைப் பலவீனப்படுத்தும்.

ஆக, தற்போதைய பின்னடைவுக்கு பொறுப்புக் கூறுவதுடன் மட்டும் நின்றுவிடாது தமிழ்த் தரப்பினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி – பொதுவான நிகழ்சி நிரல் ஒன்றின் அடிப்படையில் செயற்படுவதும் அவசியம். இதனை வெறுமனே வார்த்தைகளால் சாதித்துவிட முடியாது. செயலில் இதனைக் காட்டுவதன் மூலமாக மட்டுமே மக்களின் நம்பிக்கை வென்றெடுக்க முடியும்!
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |