காரைதீவு நிருபர் சகா)
இன்றைய நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொண்டு தங்கள் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை உகந்தையுடன் நிறைவுசெய்வது சாலப்பொருத்தமாகும்.இவ்வாறு யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 28நாட்களின் பின்னர் காரைதீவை வந்தடைந்த பாதயாத்திரிகளைச் சந்தித்து அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆலோசனை வழங்கினார்.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தில் தங்கியிருந்த யாழ்.பாதயாத்திரீகர்களுடனான இச்சந்திப்பில் பாதயாத்திரைச்சங்கத்தலைவர் வேல்சாமி, மகேஸ்வரன் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, இந்துகலாசார மாவட்ட உத்தியோகத்தர்களான கு.ஜெயராஜி, என்.பிரதாப் ஆலய அறங்காவலர் ஒன்றியச்செயலாளர் சி.நந்தேஸ்வரன் பொருளாளர் எஸ்.தேவதாஸ் ஆகியோரும் சமுமளித்திருந்தனர்.
அங்கு மேலதிக அரச அதிபர் ஜெகதீசன் மேலும் கூறுகையில்:
வழமைக்கு மாறாக கதிர்காம பாதயத்திரை என்பது இம்முறை கொரோனா காரணமாக தேசிய ரீதியில் தீர்மானமெடுக்கும் சடங்காக மாறிவிட்டது.
கதிர்காம பஸ்நாயக்க நிலமே மொனராகல அரசஅதிபர் அம்பாறை அரச அதிபர் சுகாதாரப்பகுதி அனைவரும் இணைந்து நடாத்திய கூட்டங்களின் போது இம்முறை நாட்டின் பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பு கருதி பாதயாத்திரை தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை நாம் மீறமுடியாது. நாமனைவரும் சமய நம்பிக்கை உள்ளவர்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. நமது இறைநேர்த்திகளை இம்முறை இல்லாவிடினும் அடுத்தவருடம் மேற்கொள்ளலாம். அனைத்தும் இறைவனுக்குத் தெரியும்.இந்துக்களால் கொரோனா மீண்டும் வந்துவிட்டது என்ற அவப்பெயரை நாம் வலிந்து ஏற்படுத்தக்கூடாது.
எதிர்வரும் 21ஆம் திகதி கதிர்காமக்கொடியேற்றம். உகந்தையிலும் கொடியேற்றம். அதற்கப்பால் காட்டுப்பாதை திறப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் உகந்தவரை செல்வதில் எவ்வித பிரச்சினையுமில்லை. ஆனால் அதற்கப்பால் காட்டுக்குள் பிரவேசிக்கமுடியாது. அங்கு வனபரிபாலன இலாகா வனவிலங்குகள் திணைக்களம் பாதுகாப்புபடை என்பன உள்ளெ செல்ல அனுமதிக்காது.
கதிர்காமத்திற்குக்கூட வெளியூர் வாகனங்களை அனுமதிப்பதா இல்லையா என்றெல்லாம் சிந்திக்கிறார்கள். எனவே தெரிந்தும் நாம் தவறாக நடக்கமுற்படக்கூடாது. எனவே உகந்தையுடன் நிறைவுசெய்யுங்கள் என்றார்.
பாதயாத்திரீகர்கள் சார்பாக ரி.சபாரெத்தினம் வேண்டுகோள் விடுக்கையில்:
உயரதிகாரியாகிய தாங்கள் சொல்வதை நாங்கள் முழுமனதுடன் ஏற்கிறோம். நாட்டுநன்மைக்காக கொரோனா இலங்கையிலிருந்து ஒழியவேண்டும் என்பதற்காக நேர்த்திவைத்தே இப்பாதயாத்திரையை யாழ்.சந்நிதி முருகனாலயத்திலிருந்து வழமைபோலஆரம்பித்து இப்புனிதமண்ணிற்கு வந்தோம்.
முடியுமானால் இன்னும் ஓரிருவாரங்கள் இருக்கின்றன. ஏதோ எதற்கெல்லாம் 100 மற்றும் 500 1000 என மக்கள் கூட அனுமதிக்கிறார்கள். எனவே காட்டுக்குள் தேவையான சமுகஇடைவெளியுடன் இயற்கையுடன் பயணிக்க 1000பேருக்கு அனுமதி பெற்றுத்தருவீர்களாகவிருந்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.
பதிலுக்கு அரசஅதிபர் கூறுகையில்:
இதே போன்று பல தரப்புகளிலிருந்தும் ஜனாதிபதி வரை வேண்டுகோள்கள் சென்றுள்ளன. நாமும் அதற்காக முயற்சிப்போம். முருகப்பெருமான் அருளினால் எதுவும் கைகூடும்.நம்பிக்கையுடனிருப்போம் என்றார்.
0 Comments