Home » » தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு

தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு

தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1.அவசர நிலைமையின் போது தொடர்பு கொள்ளக் கூடியவாறு சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களின் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
2. அவசர நிலைமைகளின் போது கொவிட்-19 மாதிரியான அறிகுறிகளுடன் காணப்படும் ஒருவரைத் தனிமைப்படுத்துவதற்கான தனியான அறை அல்லது பகுதி ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
3. வாசலிலேயே கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
4. போதுமான அளவில் சுத்திகரிக்கும் திரவங்கள் இருத்தல் வேண்டும்.
5. ஒவ்வொரு வகுப்புக்களும் ஆரம்பிக்கும் முன்னர் சகல மேசைகள், கதிரைகள் மற்றும் மேற்பரப்புக்கள் உரிய கிருமி நீக்கும் திரவங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுதல் வேண்டும்.
6. நிலங்கள் அனைத்தும் உரிய திரவகங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுதல் வேண்டும்.
7. சகல மாணவர்களினதும் பெற்றோர்களினதும் பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பன சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுதல் வேண்டும்.
8. மாணவர்களுக்கிடையே ஒரு மீற்றர் இடைவெளி எப்போதும் பேணப்படுவதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானதாகும்.
9. மாணவர்களுக்கிடையில் வருகையை உறுதிப்படுத்தும் பத்திரங்களை பகிர வேண்டாம். மாணவர்களின் வகுப்பறை அட்டைப் பாவனையும் தவிர்க்கப்படல் வேண்டும்.
10. அதிக மாணவர்கள் பங்கு கொள்ளும் வகுப்புக்கள் மொத்த மாணவர் எண்ணிக்கையின் அரைவாசியானவர்களுடன் ஒரு மீற்றர் சமூக இடைவெளியினைப் பேணும் வகையில் நடத்தப்படுதல் வேண்டும்.
11. மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பெற்றோர்கள் அவர்களை தனியார் கல்வி நிலையத்திற்கு அனுப்புதல் கூடாது. அதே போல் ஆசிரியருக்கும் இந்நோய் அறிகுறிகள் காணப்படின் சமூகமளிக்கக் கூடாது.
12. வகுப்பு நடத்தப்படும் இடத்தில் போதுமான காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிப்படுத்தவும்.
13. வெவ்வேறு வகுப்புக்கள் நடத்தப்படுமாயின் அவற்றின் ஆரம்பிக்கும் நேரம், முடிவடையும் நேரம் என்பன வெவ்வேறாக இருப்பதனால் மாணவர்கள் ஒன்று கூடுவதனைத் தவிர்க்க முடியும்.
14. வகுப்பறையினுள் அச்சிடப்பட்ட பாடக் குறிப்புக்களை பரிமாறப்படுவதனைத் தவிர்க்கவும். இதற்காக பொதுவான ஒரு இடத்தில் இவற்றை வைத்து மாணவர்களை எடுப்பதற்கு அனுமதிக்கலாம்.
15.கொவிட்-19 தொடர்பான அறிவுறுத்தல்கள் தனியார் வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் விரும்பத்தக்கது.
16. சகல மாணவர்களும் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக தெளிவூட்டப்படுதல் அவசியமானதாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |