Home » » இலங்கை அரசியலின் சாபக்கேடு இனவாதமும், பிரதேச வாதமுமே : இழப்புக்களில் இருந்து மீள சிந்தித்து வாக்களியுங்கள் - சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ்

இலங்கை அரசியலின் சாபக்கேடு இனவாதமும், பிரதேச வாதமுமே : இழப்புக்களில் இருந்து மீள சிந்தித்து வாக்களியுங்கள் - சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ்

நூருல் ஹுதா உமர்

இன்றைய அரசியலின் பிரதான பாத்திரத்தை வகிப்பது இனவாதமும், பிரதேச வாதமுமே. இந்த அரசியல் கோட்பாடுகள் நாட்டுக்கும் நாட்டின் மக்களுக்கும் சிறந்ததல்ல. இந்த இனவாத பிரச்சாரங்கள் மூலம் நாடு மிகப்பெரும் சிக்கல்களை கடந்த காலங்களில் சந்தித்துள்ளது. விதண்டாவாத போக்குகள் காரணமாக பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் இந்த நாடு இழந்த பெறுமானம் மிகக் கனதியானது என  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் தேசிய காங்கிரசின் சட்டவிவகார செயலாளருமான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

இன்று (17) புதன்கிழமை அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் அவ்வமைப்பின் தவிசாளர் யூ.எல்.என்.ஹுதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அரசியல் சார் கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர்.  தனது உரையில் மேலும்,

எமது நாட்டின் அரசியலில் இனவாதமே முதுகெழும்பாக இருந்து வருகிறது. ஒரு இனத்தை சூடாக்கும் அரசியலை மற்றைய இனங்களின் அரசியல்வாதிகள் செய்து தங்கள் சார் சமூகத்தின் பற்றாளர்கள் என்பதை நிரூபிக்கும் காலமாக இன்றைய காலங்கள் மாறியிருப்பது கவலையான ஒரு விடயம். தம்முடைய அரசியல் இருப்பை காத்துக்கொள்ள திட்டமிட்டு இனவாத நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இந்த நாடகம் கூடுதலாக அரங்கேறுகிறது.

ஒரு மேசையில் இருந்து சில மணிநேரம் பேசினால் தீரும் பிரச்சினைகளை பல தசாப்த காலங்களுக்கு இழுக்கும் நிலையே இன்றைய அரசியலின் அதி உச்ச சாபக்கேடு. பாரம்பரிய அரசியல் செய்து பழையவர்களை மீண்டும் மீண்டும் அரசியலில் அதிகாரத்தில் அமர்த்தி நாங்கள் அடைந்த பயன் எதுவுமில்லை. பெரும் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப், எம்.எஸ்.காரியப்பர், எம்.சி. அஹமத், தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா போன்ற தலைவர்களுக்கும் ஏனைய மத தலைவர்களுக்கும் இருந்த புரிந்துணர்வும் சகோதரத்துவமும் இப்போது இருக்கின்ற ஏனைய சிறுபான்மை கட்சி தலைவர்களிடம் இருக்கிறதா என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

இந்த நாட்டின் சாபக்கேடுகளும், முடுமைகளும் இல்லாதொழிந்து சிறந்த ஆற்றல் மிகு நாகரிகமான அரசியல் கலாச்சாரம் உண்டாக்கும் தேர்தலாக எதிரே வரும் பொதுத்தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும். இனவாதம், பிரதேசவாதம், இல்லாத சேவை மனப்பான்மை உள்ள தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா போன்றவர்கள் மக்களின் நம்பிக்கை மிகு அடையாளங்களாக உருவாக்கப்பட நாங்கள் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.         

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |