Advertisement

Responsive Advertisement

பாடசாலை மீள் ஆரம்பமும் கற்றல் ஆதரவுச் செயற்பாடுகளும்; உளவியல் ரீதியான ஓர் பார்வை

கொவிட் 19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பமாகவுள்ள இத்தருணத்தில் பாடசாலை சமூகமானது பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் தோன்றியுள்ளது. அந்த வகையில் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பொருட்டு அதற்கான வசதிகளை பாடசாலைகளில் தயார்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிதல், முறையாகக் கைகளை கழுவுதல், தனிநபர் இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்த வண்ணம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு புதிய சூழலாகும். இவ்வாறான புதிய சூழலுக்கு முகம் கொடுக்கும்போதும் பிள்ளைகள் நெருக்கீட்டுக்கு உள்ளாகலாம்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய சூழலிலே ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட போகிறார்கள். ஆகையினால் அவர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள சில நாட்கள் தேவைப்படலாம். அதற்குப் பொருத்தமான உளவலுவூட்டும் செயற்பாடுகளை ஆரம்ப நாட்களில் மேற்கொள்வது பயன்தரும்.

முதலாம் கட்டமாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் அக்காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைத் தயார்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் சாதாரண மனிதர்கள் என்ற வகையில் அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே அனுபவமுள்ள துறைசார்ந்தவர்களின் உதவியைப் பெற்று ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும் விழிப்புணர்வு செயற்பாடுகளையும் இக்காலப்பகுதியில் மேற்கொள்வதனூடாக அவர்களது உளநலத்தை மேம்படுத்த முடியும். இது தங்களது பணியை தொடர்ந்து செவ்வனே செய்வதற்கு வழிகோலும்.

அதேபோல் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களையும் இவ்வார காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் மாணவர்களின் வரவை உறுதிப்படுத்தவும் மாணவர் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மதிய உணவு போன்ற போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புக்கள் ஏற்படும்.
பாடசாலை ஆரம்பித்த அன்றைய தினமே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது என்பது ஆரோக்கியகரமானதொன்றாக அமையாது. ஆகவே பிள்ளை பாடசாலைக்கு வரும் முதல் நாளன்று வீடுகளில் முடக்கப்பட்ட காலப்பகுதியில் தாம் பெற்ற அனுபவங்களை ஏனையோருடம் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வகுப்பு மட்டத்தில் ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதன் மூலம் பிள்ளைகளது மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கொவிட் 19 தொடர்பாகவும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் தொடர்பாகவும் விழிப்புணர்வு கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம். அத்துடன் பாடசாலைக்கு வருகை தரும் பிள்ளைகளை பாராட்டி தட்டிக் கொடுப்பதன் ஊடாகவும் அவர்களின் தொடர்ச்சியான வரவை தக்கவைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.



மேலும் மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் போன்ற கற்றல் ஊக்கிகள் பெரும்பாலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையால் அவற்றிற்கான விடைகள் தொடர்பான மதிப்பீட்டுக் கலந்துரையாடல்களையும் அடுத்தடுத்த நாட்களில் மேற்கொள்ளலாம். இம்மதிப்பீட்டு கலந்துரையாடல்களை பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்கள் மேற்கொள்ளவில்லை என்றால் செயலட்டைகள், மாதிரி வினாத்தாள்கள் போன்ற கற்றல் ஊக்கிகளை வழங்கியதில் எவ்வித பயனும் இல்லாது போய்விடும்.

செயலட்டைகள், மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள், நிகழ்நிலைப் பரீட்சைகள் போன்ற கற்றல் ஊக்கிகள் மாணவர்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டதுடன் தொலைக்காட்சி கல்விச் சேவையினூடாகவும் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “வித்தியா வசந்தம்” எனும் நிகழ்ச்சியினூடாக தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாடங்கள் கற்பிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியானது பலரதும் பாராட்டைப் பெற்றது.

இக்காலப்பகுதியில் வலயக்கல்வி அலுவலகங்களின் வழிகாட்டலின் கீழ் ஆசிரியர்களின் உதவியுடன் அதிகளவு செயலட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளமையினால் அவர்களின் திறன் மேம்பட்டுள்ளமை கண்கூடு. இத்தோடு இதனை கைவிடாது தொடர்ந்தும் இத்திறனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்காக மூன்றாம் தவணைக்கான செயலட்டைகளையும் தயாரிக்கும் பணியை ஆசிரியர்கள் தொடர முடியும். இதனை வழிப்படுத்தவேண்டிய பொறுப்பு அதிபர்களையே சாரும். இவ்வாறு மூன்று தவணைகளுக்குமான செயலட்டைகளையும் தயாரித்துக்கொண்டால் தொடர்ந்து வரும் வருடங்களிலும் இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு பாட அலகும் நிறைவு செய்யப்பட்டதும் உரிய செயலட்டைகளை மாணவர்களுக்கு வழங்கி மதிப்பீட்டை மேற்கொள்ளலாம். இது பிள்ளைகளின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு மிக உதவியாக அமையும். இவ்வாறு மதிப்பீடும் அதற்கான பரிகாரச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமானால் பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியமும் இருக்காது. இச்செயற்பாடுகளை முன்னெடுக்க அதிபர்கள் தமது உள்ளக மேற்பார்வையை அதிகரிப்பதுடன் அவர்களை உற்சாகப்படுத்தவும்வேண்டும்.

பாடசாலைகள் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற இருப்பதனாலும் பிள்ளைகளின் நாளாந்த வரவை ஊக்குவிக்கவும் அவ்வப்போது ஏற்படும் நெருக்கீடுகளைக் குறைத்துக் கொள்ளவும் சில செயற்பாடுகளை வகுப்பறை மட்டத்தில் மேற்கொள்ளவேண்டியுள்ளது. ஆசிரியர்கள் வகுப்பறைக் கற்பித்தலை ஆரம்பிப்பதற்கு முன்பும் கற்பித்தலின் இடைநடுவிலும் இறுதியிலும் உற்சாகமூட்டும் சில செயற்பாடுகளை ஓரிரு நிமிடங்கள் மேற்கொள்வதனூடாக வகுப்பறையை உயிரோட்டமானதாக ஆக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக வினோத விளையாட்டுகள், குறுங்கதைகள், நற்சிந்தனைகள், நகைச்சுவை போன்ற மகிழ்வூட்டும் சிறு செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதனால் பிள்ளைகள் நெருக்கீட்டு உணர்வின்றி மகிழ்ச்சியாக கற்றலில் ஈடுபடமுடியும்.

இக்காலப்பகுதியில் மாணவர்களில் சிலர் உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருக்கலாம். அவ்வாறான மாணவர்களின் உணர்வு வெளிப்பாடுகள், நடத்தைக் கோலங்கள் போன்றவற்றில் சில மாற்றங்களை ஆசிரியர்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள் தோன்றக்கூடிய காலப்பகுதியாகவும் இது அமையலாம். ஆகவே அவ்வாறான பிள்ளைகளை இனம்கண்டு அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் அதிபர், ஆசிரியர்களுக்கு உள்ளது. பிள்ளையின் உளநலத்திற்கும் கற்றலுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உண்டு. உளநலம் பாதிக்கப்பட்ட பிள்ளையானது கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும்போது பல சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

ஆகவே பிள்ளைகளின் மனோநிலையை அறிந்து அதற்கேற்ப செயற்பாடுகளைத் திட்டமிட்டு வகுப்பறைக் கவின்நிலையைப் பேணி சிநேகபூர்வமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது சிறந்த அடைவுமட்டத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நற்பிரஜைகளையும் உருவாக்க முடியும்.

சிந்திப்போம் - செயற்படுவோம்
முத்துராஜா புவிராஜா
முதன்மை உளவளத்துணையாளர்

Post a Comment

0 Comments