Home » » உயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு

உயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகள் - கல்வி அமைச்சு


மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை இருக்கின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயங்களாக,
கேள்வி-தற்போது வீடுகளில் இருக்கின்ற 43 இலட்சம் மாணவர்களிடம் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்ன?
கல்வி அமைச்சர்- அனைத்து மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் கிடைத்த சிறந்ததொரு சவாலாகும். இந்த சவாலை வெற்றிகொள்ள எமது தன்னம்பிக்கையை அதிகரித்து எவ்வாறு செயற்படவேணடும் என்பது மிக முக்கியமாகும். இதுபோன்ற நீண்டகாலம் இந்த 43 இலட்சம் மாணவர்களும் பாடசாலையை விட்டு விலகி வீடுகளில் இருக்கவில்லை. குறிப்பாக வீட்டுச் சிறையில் இருக்கின்றனர் என்று கூறலாம். இந்த சிறுவர் பராயத்தை அவ்வாறு வீடுகளில் கடத்துவது மிகவும் கடினமாகும். எமது பாடசாலை வாழ்க்கையிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது.
கேள்வி- நீங்கள் எப்போது எதற்காக? எவ்வளவு காலம் வீடுகளில் முடங்கி இருந்தீர்கள்?

கல்வி அமைச்சர்- 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது எமக்கு இவ்வாறான ஒரு அனுபவம் கிடைத்தது. நான் அப்போது 4 அல்லது 5 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன். நான்கு மாதங்கள் பாடசாலைகள் மூடப்பட்டன. ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருந்தது. எமக்கு அந்த அனுபவம் உள்ளது. அதனால் இந்த சவாலை வெற்றியாக மாற்றிக்கொள்ள தன்னம்பிக்கையை கட்டியெழுப்பவும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விடுமுறை காலத்தை பயன்படுத்துமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
கேள்வி-பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது காணப்படும் நிலைமை என்ன?
கல்வி அமைச்சர் - பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் தற்போது உறுதியாக எதனையும் கூற முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதலாவது போராட்டமாகவே நாங்கள் பாடசாலைகளை மூடினோம். இலங்கையை சேர்ந்த தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு 48 மணிநேரத்துக்குள் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் இறுதி போராட்டம் தான் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வருவதாகும். கொரோனா தடுப்பின் முதல் நடவடிக்கை பாடசாலை மூடப்பட்டதாகும். இறுதி நடவடிக்கை பாடசாலைகளை ஆரம்பிப்பதாகும். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற அழிவை பாருங்கள். ஐரோப்பிய நாடுகளை நாங்கள் சொர்க்க நாடுகள் என்று கருதினோம். குறிப்பாக இத்தாலியில் முதல் 1000 உயிரிழப்புக்களின் பின்னரே பாடசாலைகள் மூடப்பட்டன. மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவர்.
கேள்வி -உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன?
கல்வி அமைச்சர் - உயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகளே எம்மிடம் உள்ளன. ஒன்று உயர்தரப் பரீட்சையை தாமதிப்பதாகும். இரண்டாவது கற்பிக்கப்படாத பாடங்களை நீக்கிவிட்டு பரீட்சையை வினாத்தாள்களை தயாரிப்பதாகும். இவைதான் எமது முன் காணப்படுகின்ற இரண்டு மாற்று தெரிவுகளாகும். ஆனால் கற்பிக்கப்படாத பாடங்களை நீக்கிவிட்டு பரீட்சையை வினாத்தாள்களை தயாரிப்பதிலும் ஒரு சிக்கல் உள்ளது. காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்றிருப்பர். ஆதனால் இரண்டாவது தெரிவு அவர்களுக்கு பாதகமாக அமையலாம். மேலும் முதலாவது முறை எழுதும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் இறுதி பகுதிகள் இலகுவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். அது எனக்கு தெரியாது.
கேள்வி- அப்படியானால் என்ன செய்யப்போகின்றீர்கள்?
கல்வி அமைச்சர் - மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன்.
கேள்வி - கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து?
கல்வி அமைச்சர் - இந்த நாட்டின் பிரஜையானமை எந்தளவு தூரம் அதிஷ்டமானது என்பதனை நான் எண்ணிப்பார்க்கின்றேன். சொர்க்க நாடுகள் என்ற வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ விரும்பினோம். மீனின் முதுகில் ஏறியாவது இத்தாலி செல்ல மக்கள் விரும்பினர். ஆனால் அங்கு வாழும் இலங்கையர்கள் இலங்கை வர திண்டாடுகின்றனர். எனவே இலங்கையனாக இருப்பது தொடர்பில் எமக்கு எவ்வளவு தைரியம் கிடைக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி-நீங்கள் கல்வியமைச்சராகிய பின்னர் வடக்கு கிழக்கு கல்வி நிலை குறித்து மதிப்பீடு செய்தீர்களா?
கல்வி அமைச்சர் - வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையானது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது. மிக நீண்டகாலமாக இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. இதற்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அதிகார பகிர்வு 13 ஆவது திருத்தம் குறித்து பேசிக்கொண்டிருந்தனரே தவிர இந்த பிள்ளைகளின் கல்வி குறித்தும் கவனம் செலுத்தவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தைக் கூட நான் கண்டதில்லை.
மிகவும் மோசமான நிலைமையே காணப்படுகின்றது. எந்த அளவீட்டை எடுத்துப் பார்த்தாலும் வீழ்ச்சியே உள்ளது. ஆசிரியர்கள் பாடசாலை வசதிகள் என்பனவற்றை பார்த்தால் தெரியும். வசதியுள்ள சில பாடசாலைகள் இருக்கலாம். ஆனால் பொதுவான நிலை அவ்வாறானதல்ல. ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. மதவாச்சியிலிருந்தே இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதிபர்கள் தலையிட்டு ஆசிரியர்கள் அல்லாதவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
ஆரம்ப பாடசாகைகளில் ஆசிரியர்களில் ஆசிரியர்கள் 50 வீதமானவர்கள் பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர். தொண்டர் அடிப்படையில் கற்பிக்கின்றனர். எவ்வாறான மோசமான நிலைமை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
கேள்வி - இந்த நிலையை சரிசெய்ய என்ன செய்யப்போகின்றீர்கள்?
கல்வி அமைச்சர் - கட்டாயமாக இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லை. மாத்தறை யாழ்ப்பணம் என்ற பேதம் இல்லை. மாணவர்கள் சிங்களமா? தமிழா? முஸ்லிமா? என்று நான் பார்க்கமாட்டேன். நான் 43 இலட்சம் மாணவர்களின் தந்தை என்றே கருதுகின்றேன். நான் அதிகாரிகளை அழைத்து தொடர்ச்சியாக கலந்துரையாடிவருகின்றேன். நேற்றும் ( கடந்த வியாழக்கிழமை) என அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் இரண்டு மேலதிக செயலாளர்கள் அனைவரும் வடக்கு மாகாண அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். மாகாண செயலாளர் பணிப்பாளர் அதிபர்களுடன் இந்த பேச்சுக்கள் நாள் முழுவதும் நடைபெற்றன. எனவே எங்கள் முழு அவதானமும் இந்த விடயத்தில் செலுத்தப்படும்.
சமமான நிலை ஏற்படுத்தப்படும். தமிழ் மொழி மூல மாணவர்கள் சிங்களம் கற்கவும் சிங்கள மொழி மூல மாணவர்கள் தமிழ் கற்கவும் இவர்கள் இருவரும் ஆங்கிலம் கற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டதாரி நியமனங்கள் நடைபெறுகின்றன. அதில் வடக்கில் உள்ள பட்டதாரிகளை அந்த மாகாணத்திலேயே ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்க திட்டமிட்டுள்ளேன்.
கேள்வி- 2010 ஆம் ஆண்டு நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டபோது இனி இந்த நாட்டில் இளைஞர்கள் விரக்தியடைய இடமளிக்கக் கூடாது என்று கூறினீர்கள். 2009 ஆம் ஆண்டின் பின்னரான 11 வருடங்கள் எவ்வாறு உள்ளன?
கல்வி அமைச்சர் - வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கல்வித்துறை போன்ற பல விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அதனை நாம் நேர்மையாக ஏற்கவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத்துறையில் திறமையுள்ள பிள்ளைகள் எவ்வளவு பேர் உள்ளனர்? வடக்கு மாகாணததில் தொழிற்பயிற்சி இல்லாத பிள்ளைகள் உள்ளனர். வேலையின்மை பிரச்சினை கணவனை இழந்த குடும்பத் தலைவிகளின் நெருக்கடி என ஏனைய மாகாணங்களுக்கு இல்லாத பல பாரதூரமான பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாமும் பொறுப்புக் கூறவேண்டும்.
கேள்வி -எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவீர்களா?
கல்வி அமைச்சர் - தற்போது கூட நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்துகின்றோம். ஆனால் அதனை உயர்ந்த மட்டத்தில் செய்யவேண்டும். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |