Home » » தன்னுடைய கருத்தில் மாற்றங்களின்றி உடும்புப்பிடியாக இருந்து விளக்கமளித்தார் சுமந்திரன் : தன்னுடைய கட்சி தலைவர் உட்பட எல்லோரும் செய்தது தவறு என்கிறார் !!

தன்னுடைய கருத்தில் மாற்றங்களின்றி உடும்புப்பிடியாக இருந்து விளக்கமளித்தார் சுமந்திரன் : தன்னுடைய கட்சி தலைவர் உட்பட எல்லோரும் செய்தது தவறு என்கிறார் !!




நூருல் ஹுதா உமர்

வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா "ஈழத்து காந்தி" என்று அழைக்கப்பட்டவர். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் எங்கள் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்க தன்னுடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்றிரவு தோன்றி பேசிய அவர். தன்னுடைய விளக்கத்தில்,  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் கொடுத்த செவ்வி ஒன்றை தமிழாக்கம் செய்து அதனுடாக பாரிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. சில நாட்களாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்தேன். அந்த செவ்வி எதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட செவ்வி என்பதை சிங்களம் நன்றாக அறிந்தவர்களால் அறிய முடியும்.

 நீங்கள் செய்வது நாட்டை பிரிக்கவே, நீங்கள் நாட்டுக்கு எதிராகவே செயற்படுகிறீர்கள், கடந்த காலங்களில் விடுதலை புலிகள் செய்தவற்றை இப்போது வித்தியாசமாக நீங்கள் செய்கிறீர்கள் என்ற குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தி நாட்டில் வாழும் சிங்கள மக்களிடம் அதை சேர்ப்பதையே இலக்காக கொண்டது என்பதை அந்த செவ்வியை பார்க்கும் எல்லோருக்கும் தெரியும். அப்படியான செவ்வியில் ஏன் நீங்கள் கலந்து கொண்டீர்கள்? தவிர்த்திருக்கலாம் என்று பலரும் கேட்கிறார்கள். தமிழ் மக்களுக்காக நாங்கள் அதிகமாக பேசுவது அப்படியானவர்களுடனையே தான். இது சில வேளைகளில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நாங்கள் மேசையில் அமர்ந்து பேசுவது எங்களை போன்று சிந்திப்பவர்களுடன் அல்ல.

85- 90 வீதமானோர் சமஷ்டி என்றால் பிரிவினைவாதம் என்று நினைக்கிறார்கள். அதைத்தான் அந்த செவ்வியில் சொன்னார். அப்படியான பல சிந்தனைகள் அவர்களுடன் ஊறிப்போகி இருக்கிறது. அவர்களுடன் பேசும் போது  அதை மனதில் கொண்டு பேச வேண்டும். நான் பேசியதாக இப்போதைய ஆட்சியாளர்களின் ஊடகம் (கேப்பிடல் நியூஸ் அலைவரிசையின் பெயரை குறிப்பிட்டார்) ஒன்று செய்தியொன்றை வெளியிட்டது. அந்த செய்தியில்  சிங்கள சொற்களுக்கான தங்களின் மொழிபெயர்ப்பை கொடுத்த உடனையே எங்களின் தரப்பிலிருந்து பலரும் அது தொடர்பில் பேச தொடங்கிவிட்டனர்.

அந்த செவ்வியில் சிங்கள மொழியில் என்ன பேசப்பட்டது என்பதை அறியாமலும், அந்த செய்தியை முழுமையாக பார்க்காமலும் அறிக்கை விட்டவர்களே அதிகம். அந்த செய்தியை முழுமையாக மொழிபெயர்த்து இரண்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது. அதிலும் தவறுகள் இருக்கிறது. அவர் என்னிடம் ஒரே மூச்சில் கேட்ட விடுதலை புலிகளின் அரசியல் இலக்கு அல்லது அரசியல் நடவடிக்கை, ஆயுத  நடவடிக்கைகளுடன் உடன்பாடு உண்டா எனும் கேள்விக்கு இல்லை என்று பதில் கூறியிருக்கிறேன். பிறகு தொடர்ந்தும் காரணத்தையும் சொல்லியிருக்கிறேன்.

வியாபாரய எனும் சிங்கள சொல்லின் அர்த்தம் போராட்டம் அல்ல நடவடிக்கை என்பதையே குறிக்கும். நேற்றைய தினமும் தேர்தல் அலுவலகத்தில் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தியதை நான் அவதானித்தேன். அரகள அல்லது சட்டன எனும் சொற்களே போராட்டத்தை குறிக்கும் சொற்கள். கேள்விக்கு இல்லை என்று பதில் கூறியது மாத்திரமின்றி பிறகு தொடர்ந்தும் காரணத்தையும் சொல்லியிருக்கிறேன். எப்போதும் நான் வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, நம்பவில்லை. அந்த கருத்தில் என்னிடம் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. அது பற்றி எங்கும் நான் முரண்பாடாக பேசியதுமில்லை.

அப்படி இல்லாது வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா "ஈழத்து காந்தி" என்று அழைக்கப்பட்டவர். எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிக்கையில் இந்திய போராட்டத்தை பற்றி பேசியுள்ளார். அதிலே அந்நாட்டின் வீரர்களுக்காக நேரு வாதாடிய போது காந்தியவர்கள் இங்கிலாந்துக்கு எழுதிய கடிதத்தை பற்றி சொல்லியிருக்கிறார். இவர்களுடைய வழிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லது விட்டாலும் அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் என காந்தி அக்கடிதத்தில் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நானும் அதைத்தான் காலாகாலமாக கூறிவருகிறேன்.

அந்த முறைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றும் ஆயுதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்டன அறிக்கை விடும் எவராவது ஆயுதத்தில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக வாய்திறந்து சொல்வார்களா? எனக்கு நம்பிக்கையில்லை என்று சொல்வது எப்படி குற்றமாக முடியும். த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, நம்பவில்லை என்ற என்னுடைய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார்.

தமிழரசு கட்சி தலைவர்களாக இருந்த தர்மலிங்கம், ஆளால சுந்தரம் ஆகியோரை கொலைசெய்ததை மன்னித்தது ஒரு குற்றமா என த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்க விரும்புகிறேன். இது எப்படி மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் சொல்ல முடியும்? எல்லோரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டுவந்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். கண்டன அறிக்கைகளை வெளியிட முன்னர் அறிக்கை வெளியிட்ட த.தே.கூட்டமைப்பின் ஒருவர் கூட என்னிடம் இது தொடர்பில் பேச வில்லை.

எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கூட அறிக்கை வெளியிட்டு இரண்டாம் நாள்தான் என்னுடன் பேசினார். ஏன் இவர்களுக்கு என்னுடன் பேச முடியாமல் போனது. இப்போதைய ஆட்சியாளர்களின் ஊடகம் (கேப்பிடல் நியூஸ் அலைவரிசையின் பெயரை குறிப்பிட்டார்) 21 நிமிடம் கொடுத்த செவ்வியின் துண்டுகளை மட்டும் மொழிபெயர்த்து செய்தியாக அறிவித்ததை கண்டு கொதித்தெழுந்து அறிக்கை விடுகின்றவர்கள் கடந்த 10 வருடங்கள் இந்த கட்சியில் நான் பணியாற்றுகிறேன். எனக்கு பல தேவைகளுக்காகவும் அழைப்பை மேற்கொள்வார்கள். பதிலில்லாவிட்டால் 10 தடவைக்கு மேலும் அழைப்பார்கள். ஆனால் இவ்விடயம் தொடர்பில் ஒருதடவையாவது அழைத்து இது தொடர்பில் வினவியிருக்க முடியும்.

என்னுடைய செய்திகள் என்றாலே வழமையாக திரிவுபடுத்தப்படுவதை சகல எம்.பிக்களும் அறிந்து வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஒருவர் கூட உண்மைகளை அறிய என்னை அழைக்கவில்லை என்பது மிக கவலையான விடயம். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு.

 சிங்கள மக்களை நீ வெறுப்பவன் அல்லவா எனும் கேள்விக்கு நான் சிங்கள மக்களுக்கு மத்தியில் வாழ்வது நல்ல விடயம் என்று கூறியதை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். அதில் குழம்பும் படியாக ஒன்றுமில்லை. எங்களின் அரசியல் இலக்கை அடைய ஆட்சியாளர்களுடன் பேசுகிறோம். பெரும்பாலான சிங்கள மக்கள் நாம் கேட்பது நியாயமான ஒன்று என்பதை நம்ப வேண்டும். நாங்கள் நாட்டை துண்டாட போகிறோம் என பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்தால் எமக்கு தீர்வே கிடைக்காது. சமஸ்டி என்றால் பிரிவினை என்ற அவரின் குற்றச்சாட்டுக்கு ஒரு நாட்டினுள் ஒரு சமஷ்டி தீர்வு என்பதை நான் அவருக்கு விளக்கமாக சொன்னவுடன் வாயடைத்துவிட்டார்.  அது அவரின் கருத்து மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் 90 வீதமான சிங்கள மக்களின் கருத்து அது. அதற்க்கு நாம் தெளிவாக பதில் கூற வேண்டும். எங்களுடைய கருத்துக்களை நோக்கும் போது பிரிவினைவாதிகள் அல்ல நியாயமாக பேசுகிறார் எனும் எண்ணம் சிங்கள மக்களுக்கு வர வேண்டும்.

பேச்சுவார்த்தை மேசைக்கு புலிக்கொடியுடன் சென்று அமர்ந்து பேச முடியுமா? எங்களின் உரிமைகளை பெற இன்று  ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். ஆனால் பொய்யாக மக்களின் உணர்வுகளை கிளறி பொறுப்பில்லாமல் வெறுமனே கோசம் எழுப்பி கொண்டிருப்பவர்கள் என்னுடைய மதிப்பை பெறவே மாட்டார்கள். மக்களும் அவர்களை மதிக்கவே கூடாது. - என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |