Home » » இலங்கையில் தொடரும் வன்முறைகள் மற்றும் நீதி விசாரணைகள் தொடர்பில் நவநீதம் பிள்ளை முக்கிய தகவல்

இலங்கையில் தொடரும் வன்முறைகள் மற்றும் நீதி விசாரணைகள் தொடர்பில் நவநீதம் பிள்ளை முக்கிய தகவல்


குழந்தை உட்பட 8 பொது மக்களை கொலை செய்த இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை நீதிக்கு எதிரான நடவடிக்கை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது...
இலங்கையில் இறுதிக் கட்ட போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புலம் பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட நிகழ்விற்கு வெளியிடடுள்ள செய்திக் குறிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவடைந்த போரில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்வதில் நானும் இணைந்துக்கொள்கிறேன்.
ஆறு தசாப்த கால சுயநிர்ணய போராட்டத்தின் இறுதியில் சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நினைவு தினம் மிகவும் முக்கியமானது என்பதுடன் இது மரியாதைக்குரியது.
உயிரிழந்தவர்களுக்கான நீதி, நியாயம் மற்றும் இழப்பீடுகள் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் ஊக்குவித்து வருகின்றோம்.
ஐக்கிய நாடுகள் நடத்திய விசாரணைகளில் இலங்கையில் நடந்த போரின் போது போர் குற்றங்கள். மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெரியவந்தது.
எனினும் இவற்றுக்கான நீதி விசாரணைகள் இன்னும் நடைபெறவில்லை.
இவ்வாறான நிலையில் குழந்தை உட்பட 8 பொது மக்களை கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது இழிவான நடவடிக்கை. கடந்த மாதம் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தார்.
இது நீதிக்கு எதிரான நடவடிக்கை. இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் உட்பட பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இராணுவத்தினர் கையகப்படுத்திய பொது மக்களின் காணிகள் இன்னும் முழுமையாக கையளிக்கப்படவில்லை.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் உரிமைகளுக்கு- எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து, தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |