Advertisement

Responsive Advertisement

ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த விசாரணை! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விவாதம்

தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை ஆரம்பமாகி, சமர்ப்பனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணி வரையில் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொரோனா அச்ச சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சுகாதார நடைமுறைகளை எதிர்வரும் காலங்களிலும் பின்பற்றுதல் அவசியம் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்கள் மீதான விசாரணையின் ஐந்தாம் நாளான இன்று ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதத்தின் போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியோர் குணமடையும் வீதம் அதிகரித்துள்ளமை மற்றும் மரண வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளமை ஆகியன இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் ரொமேஷ் டி சில்வா மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வைரஸ் ஒழிப்பிற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்று எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments