கல்முனை பிராந்தியத்தில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்ட வெளிநாட்டவர்களில் 984 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பில் நேற்றையதினம் கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா நெருக்கடி ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை கல்முனைப் பிராந்தியத்திற்குள் வந்த வெளிநாட்டவர்கள் 987 பேரில் தனிமைப்படுத்தலின் பின்னர் 984 பேர் விடுதலையாகியுள்ளனர்.
மேலும் மூவரே தனிமைப்படுத்தலிலுள்ளனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை ஆக இருவரே முதல்தர தொற்றுக்கு இலக்காகி இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இரண்டாந்தர தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.
இதேவேளை ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 81 பேரில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 39 பேர் தற்சமயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் வேறு பிரதேசங்களிலிருந்து கல்முனைப் பிராந்தியத்திற்குள் வந்த 1846 பேரில் சுயதனிமைப்படுத்தலின் பின்னர் 1579 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
267 பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இது இவ்வாறிருக்க 210 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 203 பேருக்கும் சமூகத்தில் 3 பேருக்குமாக இப்பரிசோதனை நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
0 Comments