Home » » கொரோனாவால் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு போகலாமா? - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவால் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு போகலாமா? - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை


கொரோனா வைரஸ் தொற்றுநோய் 210 நாடுகளில் வேரூன்றி பல இலட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்து ஆக்கிரமித்து வருகிறது.
இந்த வைரஸின் பிடியில் உலகம் முழுவதும் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 89 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பிவிட்ட பலரும் சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் வழக்கம்போல பணிக்கு திரும்பிவிடும் யோசனையில் உள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதற்காக அளித்த சிகிச்சையின்போது உடலில் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என்ற கருத்து இருக்கிறது.
ஆனால் அவர்களை கொரோனா வைரஸ் மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் இம்யுனிட்டி பாஸ்போர்ட் என்ற பெயரில் நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ் வழங்கி, கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களை பணிக்கு திரும்பச் செல்ல வைக்கலாம் என்ற யோசனைக்கு உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பாதித்து, மீண்டவர்கள் இரண்டாவது முறையாக அந்த தொற்றுநோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள், அவர்கள் உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதற்கு தற்போது ஆதாரம் இல்லை. இதுதொடர்பாக மேலதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
இந்நிலையில், சான்றிதழ் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியின் துல்லியத்தை உறுதிப்படுத்த முடியாது. அப்படி நோய் எதிர்ப்புச்சக்தி சான்றிதழ் அளித்தால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயங்கள் மேலும் கூடும்.
புதிய கொரோனா வைரசுக்கான நோய் எதிர்ப்புச்சக்தி பற்றி இன்னும் மேலதிகமான சரிபார்ப்புகள், மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன. அதன் பின்னர்தான் நோய் எதிர்ப்புச்சக்தியின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்க முடியும் என எச்சரிக்கையாக தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |