Home » » கொரோனா தொற்று: சீனாவிடம் இருந்து ஒரு லட்சம் மருத்துவ கருவிகளை வாங்கும் தமிழகம்!

கொரோனா தொற்று: சீனாவிடம் இருந்து ஒரு லட்சம் மருத்துவ கருவிகளை வாங்கும் தமிழகம்!

கொரோனா நோயை உடனடியாக சோதித்து முடிவுகளைத் தெரிவிக்கும் 'கிட்'களை சீனாவிலிருந்து தமிழ்நாடு வாங்கவிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஒரு லட்சம் கிட்கள் வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருமென்றும் அவர் கூறியிருக்கிறார். கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளுக்கென 2,500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தற்போது 90,541 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும் இதில் 10,814 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த முதலமைச்சர், கொரோனா இருக்கிறதா என்ற அறிகுறிகளுடன் 1848 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது 17 கொரோனோ ஆய்வகங்கள் உள்ள நிலையில் மேலும் 21 இடங்களில் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அதன் மூலம் மாநிலத்தில் உள்ள கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை 38ஆக உயருமென்றும் தெரிவித்தார்.
மாநிலத்தில் தற்போது 4612 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 571 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்நோயாளிகளுக்கென 22,049 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்குத் தேவையான உடல் பாதுகாப்பு உடைகள் (PPE), என் 95 முகக் கவசம், காய்ச்சல் மருந்துகள், ஆன்டி பயோடிக் மருந்துகல், ஐவி திரவங்கள் போதுமான அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7,376 தொழிலாளர்கள் இருப்பதாகவும் இவர்களுக்கென மாநிலம் முழுவதும் 268 முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த முதலமைச்சர், இந்த முகாம்களில் தமிழக தொழிலாளர்களையும் சேர்த்து 11,530 பேர் தங்கியிருப்பதாகக் கூறினார். வெளியில் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைப்புசாரா ஓட்டுனர்கள் 13,500 பேரில் 13,500 பேருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |