எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதால், மக்கள் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவர்களின் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
எலிக்காய்ச்சல் பக்டீரியா ஒன்றின் மூலம் பரவுகிறது. தண்ணீருடன் எலிகளின் சிறுநீர் கலப்பதால், இந்த நோய் ஏற்படக் கூடும். சரியான நடைமுறைகளை கையாண்டால், இந்த நோய் பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு டொக்சிசய்க்லின் மாத்திரைகளை வாரத்தில் ஒரு முறை எடுத்துக்கொண்டால், எலிக்காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க முடியும் என சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வயல்களுக்கு அருகில் இந்த பக்டீரியாக்கள் அதிகளவில் இருக்கும் என்பதுடன் விவசாயிகள் இந்த நோய் தொடர்பாக கவனத்துடன் இருக்க வேண்டும்.
காய்ச்சல், சதை வலி, தலைவலி உள்ளிட்டவை இந்த நோயின் அறிகுறிகளாகும். அத்துடன் கண் சிவந்து போதல், வாந்தி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறுவது குறைந்து போதல் என்பவும் இந்த நோயின் அறிகுறிகள்.
உடலில் காயங்கள் இருக்கும் போது வயல்களில் வேலை செய்தால், வயல்களுக்கு அருகில் ஓடும் தண்ணீரில் குளிக்கும் போதும், அந்த காயங்கள் வழியாக இந்த பக்டீரியா உடலுக்குள் செல்லக்கூடும். சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகம், இருதயம், மூளை, கல்லீரல் போன்ற அவயங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மரணங்கள் கூட ஏற்படலாம் எனவும் விசேட மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் சில பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
0 Comments